கார்தோம்: ஈரான் நாட்டைச் சேர்ந்த இரண்டு போர்க் கப்பல்கள் அதன் நட்பு நாடான சூடானில் நிறுத்தப்பட்டுள்ளது. சூடான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுக்கவும், இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுக்கவுமே இந்த கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூடான் நாட்டில் கார்தோம் நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலையில் அண்மையில் இரண்டுமுறை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வதாக கருதி இந்த தொழிற்சாலை மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்கியதாக சூடான் குற்றம்சாட்டியது. இதற்கு இஸ்ரேல் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் இஸ்ரேலின் இராணுவ அமைச்சர் பாராக்கிடம் இது பற்றி ஒரு செய்தி நிறுவனம் கருத்து கேட்டதற்கு “இது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்று அவர் கூறிவிட்டார்.
இஸ்ரேலை மிரட்ட போர்க்கப்பல்?
இதற்கிடையே சூடானின் நட்பு நாடான ஈரான் நாட்டின் 2 போர் கப்பல்கள் சூடானின் செங்கடல் பகுதி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தீவிரவாத செயல், கடற்கொள்ளையர்களை ஒடுக்கவே போர் கப்பல்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், 2 நாட்டு தளபதிகளும் சந்தித்து பேச இருப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது.
இருப்பினும் இஸ்ரேலை மிரட்டவே ஈரான்-சூடான் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.