ஏய்ட்ஸ் நோயால் இறந்ததாக கூறப்படும் கைதிக்குச் சவப்பரிசோதனை

திங்கள்கிழமை காஜாங் சிறையில் இறந்துபோன ஆர்.குமரராஜாவுக்கு சவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவர் ஏய்ட்ஸ் நோயால் இறந்தார் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

அவரின் உடல்மீது பரிசோதனை இன்று நண்பகல் தொடங்கியது. அது முடிய மூன்று மணி நேரம் ஆகலாம் என்று பிகேஆர் மனித உரிமை ஆர்வலர் எஸ்.ஜெயதாஸ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஜெயதாஸுக்கும் லிபர்டி அமைப்பின் பிரதிநிதி வழக்குரைஞர் ஜி.சிவமலர், குமாரராஜாவின் குடும்பத்தினர், மெஜிஸ்ட்ரேட் அப்துல் ஜலில், காஜாங் போலீஸ் நிலையத்தின் ஏஎஸ்பி சுரேஷ், ஆகியோருக்கும் சவப்பரிசோதனை பற்றி செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுத் தலைவர் டாக்டர் சுரைடா விளக்கமளித்தார்

இதற்குமுன் சுரைடாவுடன் பேசியபோது அவர், குமாரராஜா இறந்துகிடந்தபோது அவரது வயிறு உப்பிப்போயிருந்ததாக தெரிவித்தார் என்றும் ஜெயதாஸ் கூறினார்.

அவரது இறப்புமீது தமக்குச் சந்தேகம் இருப்பதாக குமாரராஜாவின் தாயார் எம்.சூரியகாந்தி (வலம்) போலீசில் புகார் செய்துள்ளார்.

நேற்று சூரியகாந்தி நாடாளுமன்றம் சென்று அங்கு உள்துறை துணை அமைச்சர் அபு செமான் யூசுப்பைச் சந்தித்து, தம் மகனின் மரணம்மீது  விசாரணை செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

குமாரராஜா ஏய்ட்ஸ் நோயால் இறந்தார் என்று கூறப்படுவதை அவர் நம்பவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை காஜாங் சிறையில் தம் மகனைப் பார்க்கச் சென்றிருந்ததாகவும் அப்போது அவர் அவர் நல்ல நிலையில் காணப்பட்டதாகவும் கூறினார்.

2011-இல் மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்துக்காக குமாரராஜாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பிப்ரவரி மாதம் விடுதலை பெறுவதாக இருந்தது.

செவ்வாய்க்கிழமை காஜாங் ஒசிபிடி அப்துல் ரஷிட் அப்துல் வகாப்பைத் தொடர்புகொண்டபோது அவர் குமாரராஜா ஏய்ட்ஸ் நோயால் இறந்ததை உறுதிப்படுத்தினார். ஆனால், மேல்விவரம் தரவில்லை.

TAGS: