துவா சொல்லாததற்காக நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் மீது கல்வித் துறையும் ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையும் நேற்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளன.
குவா மூசாங், கோலா பெட்டிஸில் உள்ள Dewan Jubli Perak மண்டபத்தில் நடைபெற்ற ஐந்து மணி நேரச் சந்திப்பின் போது அவை வருத்தம் தெரிவித்துக் கொண்டதாக பிஹாய் தேசியப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் அரோம் அசிர் கூறினார்.
“அவை நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் மன்னிப்புக் கேட்பது எழுத்துப்பூர்வமாகவும் ஊடகங்களிலும் வெளியிடப்பட வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க அது உதவும்,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் சொன்னார்.
அவ்வாறு செய்வதின் மூலம் பெற்றோர்களுடைய ஒப்புதல் இல்லாமல் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு இஸ்லாமியக் கல்வியை மற்ற பள்ளிக்கூடங்கள் போதிப்பதை தடுக்கும் என அரோம் நம்புகிறார்.
பிஹாய் தேசியப் பள்ளி, கோலா பெட்டிஸ் தேசியப் பள்ளி, பாலார் தேசியப் பள்ளி, போஸ் பாசிக்-கில் உள்ள ஸ்ரீ பெர்மாய் தேசியப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த பிள்ளைகளின் 150 ஒராங் அஸ்லி பெற்றோர்களும் 30 அரசாங்க, அரசு சாரா அமைப்புக்களின் பேராளர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
குவா மூசாங் மாவட்ட கல்வி அதிகாரி முகமட் ஸாஹாரி ஒஸ்மான், ஒராங் அஸ்லி விவகாரத் துறையின் குவா மூசாங் பேராளர் ஜைனல் பாக்கார், வழக்குரைஞர் மன்றப் பேராளர் சித்தி காசிம், புத்ராஜெயாவில் உள்ள கல்வி அமைச்சின் பேராளர் ஒருவர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அடங்குவர்.
“பிஹாய் தேசியப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் அங்கு இருந்தார். ஆனால் பிள்ளைகளை அறைந்த ஆசிரியர் அங்கு காணப்படவில்லை.”
“அந்த விவகாரத்தை கல்வி அமைச்சின் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அந்த அமைச்சின் பேராளர் உறுதி அளித்தார்,” என்றும் அரோம் சொன்னார்.
பெற்றோர்களுடைய முன் அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஒராங் அஸ்லி பிள்ளைக்கும் சமயக் கல்வி போதிக்கப்படக் கூடாது என 1954ம் ஆண்டுக்கான பழங்குடி மக்கள் சட்டத்தின் 17வது பிரிவு குறிப்பிடுவதாக அவர் மேலும் கூறினார்.
அந்தப் பிரிவை மீறுகின்றவர்களுக்கு 500 ரிங்கிட்டுக்கு மேற்போகாத அபராதம் விதிக்கப்பட வேண்டும் என பிரிவு 17 (3) கூறுகின்றது.
“சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக தண்டனை ஏதும் கொடுக்கப்படா விட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பெற்றோர்கள் பரிசீலிக்கலாம்,” என்றார் அவர்.
‘கட்டாய மத மாற்றம் இல்லை’
மாவட்ட கல்வித் துறையின் அறிக்கை கிடைத்த பின்னர் கல்வி அமைச்சு அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்யும் என மனித உரிமை ஆணையர் முகமட் ஷானி அப்துல்லா கூறினார்.
பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியக் கல்வி அல்லது ‘கட்டாய மத மாற்றம்’ நிகழ்வதாக கூறப்படுவதை அமைச்சு மறுத்துள்ளது.
“பிரார்த்தனையைச் சொல்லுமாறு பிள்ளைகளுக்கு ஊக்கமூட்டப்படுகின்றது. ஆனால் இஸ்லாமிய அடிப்படையில் என்பது அவசியமில்லை என அவை கூறிக் கொண்டன. ஆனால் அந்த விளக்கத்தை ஒராங் அஸ்லி குடும்பங்கள் ஒப்புக் கொள்ளவில்லை,” என அவர் சொன்னார்.
அந்தக் கூட்டத்தில் பிஹாய் தேசியப் பள்ளித் தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அந்தக் கூட்டத்துக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் குடும்பங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.”
அக்டோபர் 23ம் தேதி தங்களது நான்கு 12 வயது பெண் பிள்ளைகளை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் ஆசிரியருக்கு எதிராகப் போலீசில் புகார் செய்வதற்காக போஸ் பிஹாயைச் சேர்ந்த மூன்று தந்தையர்கள் மூன்று மணி நேரம் பயணம் செய்து குவா மூசாங் சென்றனர்.
கிளந்தான் பேராக் எல்லைக்கு அருகில் குவா மூசாங் உட்புறப் பகுதியில் ஒராங் அஸ்லி பிள்ளைகளுக்கு மட்டுமான அந்தப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.
அந்தப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வி போதிக்கப்படுகின்றது என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் பெற்றோர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.
பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டதாகக் கூறப்படுவதை நேற்று கிராமப்புற வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபி அப்டால் மறுத்திருந்தார்.