பொதுமக்களிடையே “எதிர்ப்புக்குரல்” பலமாக இருப்பதால் அரசாங்கம் “குறைகளுடைய” தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) யை நிறுத்தி வைத்து அதை மேலும் ஆராய வேண்டும் என்று பிஎன் உறுப்புக்கட்சிகளில் ஒன்றான கெராக்கான் கேட்டுக்கொண்டிருக்கிறது.
“ஏஇஎஸ்-இல் பல குறைகள் இருப்பது தெரியவருவதால் போக்குவரத்து அமைச்சு அதை மேலும் ஆராய வேண்டும்.
“சாலைப்பாதுகாப்பைத் தடுக்க வேண்டும் என்பது ஒரு மேலான நோக்கம்தான். ஆனால், அதன் அமலாக்கத்தில் அவசரம் கூடாது”, என்று கெராக்கானின் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, தரமான வாழ்க்கை பிரிவுத் தலைவர் சியா சூன் ஹாய்(இடம்) இன்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தினார்.
ஏஇஎஸ்-ஸுக்கு எதிராகக் கடும் புகார்கள் எழுந்து அதன் விளைவாக நான்கு பக்காத்தான் மாநிலங்கள் அம்முறையை நிராகரித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் எவ்வகையிலும் அதை அமல்படுத்துவதில் தீவிரமாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்றார்.
“சம்மன்கள் பெற்ற பலரிடமிருந்து கெராக்கானும் புகார்களைப் பெற்றிருக்கிறது”, என்றாரவர்.