எம்பி பேசுகிறார்: கோபிந்த் சிங் டியோ
பிஹாய் இடைநிலைப்பள்ளியில் நான்கு ஓராங் அஸ்லி மாணவர்களைக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் ஆசிரியர்மீது தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
பிஹாய் பள்ளி,குவா மூசாங் உள்புறம் கிளந்தான்-பேராக் எல்லைக்கருகில் ஓராங் அஸ்லி மாணவர்களுக்காகவே உள்ள ஒரு பள்ளிக்கூடமாகும்.
அங்கு பயிலும் 12-வயது மாணவிகள் நால்வரை அக்டோபர் 23-இல், ஓர் ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததாக அம்மாணவிகளின் மூன்று தந்தையர் கடந்த வாரம் போஸ் பிஹாயிலிருந்து மூன்று மணி நேரம் பயணம் செய்து குவா மூசாங் போலீசில் புகார் செய்துள்ளனர்.
ஆசிரியருக்கு மாணவர்களைக் கன்னத்தில் அறையும் உரிமை இல்லை.அது உண்மையானால் அது சட்ட விரோதமாகும். கடுமையான விவகாரமான இதனை அலசி ஆராய வேண்டும்.
கன்னத்தில் அறைதல் என்பது வலிந்து தாக்குதல் என்றாகும். அது குற்றவியல் சட்டத்தின் பகுதி 323-இன் ஒரு குற்றச்செயலாகும். அதற்கு ஓராண்டு சிறை அல்லது ரிம2,000வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
அத்துடன் இங்கு 1954ஆம் ஆண்டு ஆதிவாசிகள் சட்டத்தின் பகுதி 17 மீறப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. அச்சட்டம் பெற்றோர் அனுமதியின்றி எந்தவொரு ஓராங் அஸ்லி பிள்ளைக்கும் சமயக் கல்வி புகட்டக்கூடாது என்கிறது.
இது பொதுமக்கள் நலன் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம். மலேசியாவில் பல சமய பின்னணிகளைக் கொண்டவர்கள் வாழ்கின்றனர். பள்ளிகள் பிள்ளைகளைப் பாதுகாக்கும், நம் பல்லின, சமய பின்னணிகளை மதித்து அதற்கேற்ப அவர்களுக்குக் கல்வி புகட்டும் என்ற நம்பிக்கையில்தான் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புகிறோம்.
எந்த ஒரு மனிதரையும் அவரது சமய நம்பிக்கைக்கு விரோதமாக எதையும் செய்யுமாறு வற்புறுத்தக்கூடாது.
இவ்விசயத்தில் சட்டத்துறைத் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு வழக்குரைஞர் என்ற முறையில் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தும் கடப்பாடு அவருக்கு உண்டு.
கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபி அப்டால் (வலம்) மாணவர்கள் அறையப்படவில்லை என்று முந்திக்கொண்டு மறுப்புத் தெரிவித்தது ஏன் என்பதையும் விளக்க வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்துகிறேன்..
அமைச்சரான அவர் இப்படிப்பட்ட விவகாரங்களில் எதிர்வினை ஆற்றுவதில் கவனமாக செயல்பட வேண்டும்.
பொறுப்பற்ற முறையில் மனம்போன போக்கில் அறிக்கைகள் விட்டால், அரசாங்கம் இவ்விவகாரத்தை மூடி மறைக்க முயல்வதாக மக்கள் நினைக்கத் தொடங்கி விடுவார்கள்.
===========================================================================
கோபிந்த் கோபிந்த் சிங் டியோ: பூச்சோங் எம்பி