அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தாங்கள் சொல்வதற்குப் பொறுப்பேற்க வேண்டும்

சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் உட்பட அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தாங்கள் சொல்வதற்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.

அதிகாரிகள் தயாரித்ததையே  தாங்கள் வாசித்ததாக கூறி அவர்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது என பத்து எம்பி  சுவா தியான் சாங் கூறினார்.

“அதிகாரிகள் தயாரிக்கும் பதிலைத் திருத்தும் உரிமை அமைச்சருக்கு உண்டு.”

“நாடாளுமன்றத்தில் பயன்படுத்த வேண்டிய சொற்றொடர்களை அவர் தேர்வு செய்யலாம். தமக்கு  கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் மீது அமைச்சர் மனநிறைவு கொள்வதும் முக்கியமாகும்,” என தியான் சுவா என்றும் அறியப்படும் அந்த பிகேஆர் உதவித் தலைவர் கூறினார்.

அவர் இன்று பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களைச் சந்தித்தார்.

வெட்டுமர செல்வந்தரான மைக்கல் சியாவுக்குச் சொந்தமான ஆடம்பரக் காரை தமது புதல்வர் பயன்படுத்தியதாக கூறப்படும் விஷயத்தில் எந்த சுய நலனும் சம்பந்தப்படவில்லை என நஸ்ரி நேற்று விடுத்த அறிக்கைக்கு தியான் சுவா பதில் அளித்தார்.

அந்த விவகாரம் மீது நாடாளுமன்றத்தில் தாம் தெரிவித்த பதில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவற்றிடமிருந்து வந்தது என்றும் நஸ்ரி குறிப்பிட்டிருந்தார்.