“பினாங்கு அடுத்த ஆண்டில் வறுமையை முற்றாக ஒழிக்கும்”

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், அடுத்த ஆண்டுக்குள் பினாங்கில் வறுமை நிலை முற்றாகத் துடைத்தொழிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பரம ஏழ்மைநிலை என்பதை அம்மாநிலத்திலிருந்து ஒழித்துக்கட்டியிருப்பதாக 2009-இலேயே லிம், அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015-க்குள் வறுமைநிலையை முற்றாக ஒழிக்க நிர்ணயித்திருந்த இலக்கை மாநில அரசு இப்போது முன்னோக்கிக் கொண்டு வந்திருப்பதாக அவர் சொன்னார்.

அந்த இலக்கை அடைய குறைந்தபட்ச குடும்ப மாத வருமானம் ரிம650-இலிருந்து ரிம770 ஆக உயர்த்தப்படும்.

“இது குறைந்தபட்ச வருமானம் வறுமைக் கோடான ரிம763-க்கும் கூடுதலான ஒரு தொகையாகும். இந்தத் தொகையைவிடகுறைவாக மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு துண்டுவிழும் தொகையை அரசே இட்டு நிரப்பி ரிம770 ஆக்கும்”.இன்று மாநில சட்டமன்றத்தில் 2013 பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது லிம் இதனைத் தெரிவித்தார்.

“அடுத்த ஆண்டுக்குள் வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக பினாங்கு திகழும்”, என்றவர் அறிவித்தார்.

ஆனால் அவரது அறிவிப்பை அவரின் எதிர்ப்பாளர்கள் குறிப்பாக அம்னோ  சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்கவில்லை. எள்ளி நகையாடினர்.

தெலுக் பாகாங் சட்டமன்ற உறுப்பினர் ஹில்மி யாஹ்யா, பரம ஏழமைநிலை அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டதாக லிம் ஏற்கனவே அறிவித்ததைச் சுட்டிக்காட்டினார்.

“பரம ஏழ்மைநிலை இல்லை என்றார். ஆனால், இன்னும் வறுமையில் சிக்கிக்கொண்டு அவதிப்படுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்”, என்று ஹில்மி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அக்கூட்டத்தில் அவரின் சகாக்களும் கலந்துகொண்டனர்.

“சிஎம் பொய் சொல்வதுபோல் தெரிகிறது. அவர் அறிவித்து நான்கு-ஐந்து ஆண்டுகள் ஆகப்போகின்றன. இன்னும் அப்பிரச்னை தீரவில்லை. அவர் தப்பான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்”.

குடும்ப வருமானத்தில் துண்டுவிழும் தொகையை இட்டு நிரப்புவதைவிட மக்கள் குடும்ப வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதற்கு உதவியாக  மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வது நல்லது என்று ஹில்மி தெரிவித்தார்.

TAGS: