குகனின் தாயார்: “அதிகாரப்பூர்வ மரண விசாரணை அறிக்கையில் நம்பிக்கை இல்லை”

ஏ.குகனின் தாயார் என்.இந்திரா, தம்  மகனின் இறப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட முதலாவது சவப் பரிசோதனை அறிக்கையை நம்பவில்லை என்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். போலீஸ் காவலில் இருந்தபோது அடிக்கப்பட்டதால்தான் குகன் இறந்தார் என்றவர் நம்புகிறார்.

அரசாங்கத்துக்கும் போலீசுக்கும் எதிராக தொடுத்துள்ள ரிம100மில்லியன்  சிவில் வழக்கில் சாட்சியமளித்த இந்திரா, முதலாவது சவப் பரிசோதனை அறிக்கை குகனின் உடலில் 22 இடங்களில் காயங்கள் இருந்ததாகக் கூறிய வேளையில் இரண்டாவது அறிக்கை 45 காயங்கள் காணப்பட்டதாக விவரமாகப் பட்டியலிட்டிருந்தது என்றார்.

இன்று இந்திரா தவிர்த்து அவரின் வழக்குரைஞர் என்.சுரேந்திரனும் சாட்சியமளித்தார்.அத்துடன் செர்டாங் மருத்துவமனை சவக்கிடங்கில் 2009, ஜனவரி 20-இல் குகனின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்ததைக் காண்பிக்கும் காணொளியும் திரையிடப்பட்டது.

முதல் சாட்சியாக சாட்சியமளித்த சுரேந்திரன், குகனின் உடலைக் காண்பதற்காக அவரின் குடும்பத்தார் காத்திருக்க வேண்டியிருந்ததையும் அதனால் ஏற்பட்ட மனவேதனையையும் அதன் பின்னர் இரண்டாவது சவப் பரிசோதனைக்காக அதிகாரிகளீடம் விண்ணப்பித்து அதற்காக ஐந்து நாள் காத்திருந்து அனுமதி பெற்றதையும் எடுத்துரைத்தார்.

இரண்டாவது சவப் பரிசோதனையைச் செய்த டாக்டர் பிரஷாந்த் சம்பர்கர், தம் அறிக்கையில்  குகன் பயங்கரமாக அடிக்கப்பட்டு அதனால் உடல் அணுக்கள் சிதைவுற்று சீரநீரகம் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக இறந்தார் என்பது தம் பரிசோதனையில் தெரிய வருவதாகக் கூறியிருந்தார்.

டாக்டர் பிரஷாந்த் ஒப்பந்த காலம் முடிந்து இந்தியா திரும்பி விட்டார் என்பதால் அவர் சாட்சியமளிக்க வரவில்லை.

முதலாவது சவப் பரிசோதனையைச் செய்தவர் டாக்டர் அப்துல் கரிம் தாஜுடின். அவரை மலேசிய மருத்துவ மன்றம் கண்டித்திருப்பதாகவும் சுரேந்திரன் கூறினார்.

TAGS: