சீபீல்ட் தோட்ட ஆலய விவகாரத்தில் மாநில அரசு மௌனம் சாதிக்கவில்லை

இந்த சீபீல்ட் ஆலய விவகாரத்தில் மாநில அரசு மௌனம் சாதிக்கிறது என்ற பேச்சுக்கே இடமில்லை.  மாறாக இக்கோயிலை வைத்து நடத்தப்பட்டு வரும் அரசியல் அணுகுமுறைகளை மிகத் தீவிரமாக மாநில அரசு கவனித்து வருகிறது.

பிரதமர் நஜிப்பின் அரசாங்கம் சிலாங்கூரில் ஏதாவதொரு இந்து ஆலயத்தை உடைத்துத்தான் அடுத்த தேர்தலுக்கான அடித்தளத்தையிட சித்தமாகவுள்ளது என்பதை மலேசிய இந்தியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதற்கான தொடக்க வேலைகளை பத்துமலை அடிவாரத்தில்  29 மாடி கட்டுமானத்தில் ஆரம்பிக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். அங்கு தோல்வி கண்டதால், அடுத்த வேலைகளை சீபீல்டு  மகாமாரியம்மன் ஆலயத்தில் மேற்கொள்ளவிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை எந்த ஆலயத்தையும் உடைக்க எவருக்கும் மாநில அரசு அனுமதியளிக்கவில்லை என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும். அப்படியிருக்க அடுத்த தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் சீபீல்டு ஆலயத்தை உடைக்க, அதுவும், மாநில அரசு அனுமதிக்கும் என்ற எண்ணத்திற்கே இடமில்லை. 

சீபீல்டு ஆலயத்திற்குப் பதிவு பெற்ற ஒரு நிர்வாகம் உண்டு. அவர்களுடன் நில உரிமையாளர் மற்றும் மேம்பாட்டாளர் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரின் குற்றச்சாட்டு. ஆனால், இந்த ஆலய விவகாரத்தில் ஏற்கனவே மாநில அரசாங்கத்தை ஒரு பிரதிவாதியாகக் குறிப்பிட்டு வழக்குத் தொடுத்துள்ளது ஆலய நிர்வாகம்.

ஆக, ஆலய விவகாரத்தில் மாநில அரசு பங்கெடுக்க, இந்த வழக்கு ஒரு சட்ட முட்டுக்கட்டையாக உள்ளது. அதனால்,  ஆலயத்தில் செயல்படும் மூன்று குழுக்களுக்களும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுக்கான வேண்டும் என்பதே நமது ஆலோசனை.

அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுக்கான, ஒரு நடுநிலை குழுவுக்கும் அனுமதியளித்து கடந்த வாரமே அதற்கான கடிதம் அனுப்பியுள்ளது மாநில அரசு.

ஆக, நமது ஆலயம் நமது பொறுப்பு என்பதற்கு ஒப்ப,  ஆலயத்தைக் காக்கவும் அதன் நீண்டகால நன்மையைக் கருத்தில் கொண்டும் அங்கு  செயல்படும் எல்லா அமைப்புகளும் ஒன்றுபட்டு அவர்களுக்குள் ஒரு தீர்வைக் காண  வேண்டும் என்பதே மாநில அரசின் வேண்டுகோள். 

ஆலய மீட்புக் குழு அல்லது ஆலயத்தைப் பராமரிக்கும் குழு அவரவர் உரிமையை நிலைநாட்ட அவர்கள்  நீதிமன்றத்தையும் நாடலாம். அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்திச் சிறந்த தீர்வுக்கான வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பலமுறை இப்பிரச்னை மீது மாநில அரசைச் சாடி அறிக்கை விட்டுள்ளவர்களின் குற்றச்சாட்டு, தற்காலிக ஆலய கட்டுமானத்திற்கு மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது என்பதாகும். 

அவர்கள் குறிப்பிட்டுள்ள நிலம் ஒரு தனியார் நிலம். எந்த ஒரு தனியார் நிலத்திலும், ஒரு பகுதியை முஸ்லீம் அல்லாதவர் வழிபாட்டு மையமாக அங்கீகரிக்க வேண்டும் என்று அந்த நில உரிமையாளர் கேட்டுக் கொண்டால், அதற்கான தகுதிகள் அந்த  நிலத்திற்கு இருக்குமாயின் மாநில அரசு அதற்கு அனுமதி வழங்கும்.

இன்றைய நிலையில் எந்தத் தனியார் நிறுவனமும், அரசாங்க வற்புறுத்தலின்றி நிலம் ஒதுக்குவது இல்லை.

ஆக, அப்படி ஒதுக்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு தற்காலிக கட்டடத்தை எழுப்ப அனுமதி
பெறுவது நில உரிமையாளரின் கடமை.  ஆனால் அந்தத் தற்காலிகக் கட்டடத்தை எந்த ஆலயத்துக்கும் நில உரிமையாளர் கொடுக்கலாம். அது அவரின் விருப்பம்.

அதே வேளையில், நீதிமன்ற உத்தரவின்றி சீபீல்டு ஆலயத்தை அகற்றும், எந்தத் தனியார் அல்லது தனிப்பட்ட குழுவினரின் முயற்சிக்கும் மாநில அரசு ஒத்துழைப்பு வழங்காது. ஆனால், நீதிமன்ற தீர்ப்புக்குத் தலைவணங்குவது ஒரு மாநில அரசின் கடமை என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த ஆலயத்தின் அருகில் கடந்த வாரம் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் ஓர் உயிர் பலியானது அனைவருக்கும் தெரியும். அதற்கு முன்பும் சாலை விபத்துகள் தொடர்பாக போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாலயத்திற்கு அருகில் நெடுஞ்சாலை நிலத்தில் செயல்பட்டு வந்த மகாகாளியம்மன் ஆலயத்திற்குத் தீர்வு கண்டுள்ள மாநில அரசு, மக்களின் நீண்டகால நலனைக் கருத்தில்
கொண்டு, அதே போன்ற ஒரு நல்ல தீர்வை இவ்வாலய விவகாரத்திலும் காண விரும்புகிறது.

இதற்குமுன், அங்கு செயல்பட்ட மகாகாளியம்மன் ஆலயத்திற்கு ஓர் ஏக்கர் நிலமும் ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேம்பாட்டாளரை நிர்ப்பந்தித்து வாங்கித் தந்துள்ள மாநில அரசு, மகாமாரியம்மன் ஆலய விவகாரத்தில் கண்டும் காணமல் இருப்பதாகச் சொல்வது தவறு என்று கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

TAGS: