லிம் குவான் எங்-கை களங்கப்படுத்த இன்னொரு முயற்சி

‘லிம் குவான் எங் & சியோங் யின் பான் ரகசிய ஒலிப்பதிவு’ என்னும் தலைப்பில் ஒர் ஒலிப்பதிவை மசீச ஆதரவு  Souminews இணையத் தளம் யூ டியூப்-பிலும் முக நூலிலும் வெளியிட்டதைத் தொடர்ந்து பினாங்கு முதலமைச்சர்  அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்த விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால் அது பினாங்கு முதலமைச்சருக்கும் அவரது பெண் பத்திரிக்கை அதிகாரிக்கும் இடையிலான ரகசிய உரையாடல் அல்ல என்பது தெரிய வந்தது. அது ஜுலை 18ம் தேதி லிம் நடத்திய நிருபர்கள் சந்திப்பின் ஒலிப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

“அந்த நிகழ்வுக்கு வந்த பத்திரிக்கையாளர்களிடம் அதன் பிரதி இருக்க வேண்டும். அவர்கள் எனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலைப் பதிவு செய்தனர்,” என சியோங் சொன்னார்.

அது சீனக் கல்விக்கான ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்டதாகும். இந்த விவகாரம் மீது எந்த நெருக்கடியையும் முதலமைச்சர் எதிர்நோக்கவில்லை,” என அவர் நேற்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

ஜுலை 18ம் தேதி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் லிம் நிருபர்களைச் சந்தித்தார்.

அனைத்துப் பள்ளிகளுக்குமான ஒதுக்கீடுகளில் பிஎன் ‘நியாயமாக’ நடந்து கொள்வதாக துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தெரிவித்ததை அப்போது லிம் நிராகரித்தார்.

“அந்த நிருபர்கள் சந்திப்பின் போது துணைப் பிரதமர் குறிப்பிட்ட விவரங்களைத் திரட்டுமாறு என்னை லிம் கேட்டுக் கொண்டார்.  பத்திரிக்கைகளில் வெளியான விவரங்கள் முழுமையாக இல்லாததால் தாம் பதில் அளிக்கும் முன்னர் துல்லிதமான விவரங்களைப் பெறுமாறும் அவர் உத்தரவிட்டார்,” என சியோங் விடுத்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

முதலமைச்சருக்கும் தமக்கும் இடையிலான உரையாடல் ரகசியம் இல்லை என்றும் ஊடகங்கள் உட்பட பலரது முன்னிலையில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

“Souminews ‘ரகசியம்’ எனக் குறிப்பிட்டுள்ளது முதலமைச்சருக்கும் தமக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலே,” என்றார் அவர்.

சீனப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகள் லிம்-முக்கும் சியோங்-கிற்கும் இடையில் மண்டரின் மொழியில் நடைபெற்ற அந்த உரையாடல்  யூ டியூப் இணையத் தளத்தில் இடம் பெற்றுள்ளது.

அந்த ஒலிப்பதிவில் ஒதுக்கீடுகள் குறித்த கூடுதல் விவரங்களைப் பெறுமாறு லிம் சியோங்-கைக் கேட்டுக் கொள்கிறார்.

லிம்-முக்கும் சியோங்-கிற்கும் இடையில் நிகழ்ந்த ‘ரகசிய உரையாடலின்’ நோக்கம் சீனப் பள்ளிகளுக்கான பிஎன் ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்களை ‘திரிக்கும் சதி’ என அந்த ஒலிப்பதிவை யூ டியூப்-பில் சேர்த்த அடையாளம் தெரியாத நபர் கூறிக் கொண்டார்.

அவர்கள் இருவருக்கும் இடையில் ‘வழக்கத்துக்கு மாறான’ உறவுகள் இருப்பதாகவும் அவர் சொல்லிக் கொண்டார்.