மலேசியாகினி CEO பிரெமேஷ் சந்திரன் விருது பெற்றார்

மலேசியாகினியின் தலைமை செயல் அதிகாரி பிரெமேஷ் சந்திரன், அங்கீகரிக்கப்பட்ட விளம்பர முகவர்கள் சங்கத்தால்(Association of Accredited Advertising Agents-4ஏ) ‘2012-இன் சிறந்த ஊடக ஆளுமை (Media Personality of 2012) விருதளிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில், அவருக்கு 4ஏ-இன் தலைவர் டோனி சவரிமுத்து விளம்பரத் தொழில்துறையின் பெருமைமிக்க விருதாகக் கருதப்படும் அதனை வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட பிரெமேஷ் சந்திரன், “மலேசிய ஊடகத்துறைக்கு மலேசியாகினியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் 4ஏ-க்கு நன்றி நவில்கிறேன்”, என்றார்.

“நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும் நியாயமான தேர்தல்களுக்கான கோரிக்கைகள் நிறைவேறவும், மத்தியிலும் மாநில அளவிலும் செயல்படும் அரசுகள் மக்கள் நலனுக்காகப் பணியாற்றுவதை உறுதிப்படுத்தவும் எங்களின் சிறிய பங்கினைத் தொடர்ந்து செய்வோம்”, என்றாரவர்.

மூன்றாண்டுகளாக வழங்கப்படு வரும் அவ்விருது “பயமின்றியும் பாரபட்சமின்றியும்” உண்மைக்காக பாடுபடும் மலேசிய ஊடகவியலாளர்களை அங்கீகரித்தும் பாராட்டியும் வழங்கப்படுகிறது.

மலேசியாகினிக்கு அவ்விருது இரண்டாவது தடவையாகக் கிடைத்துள்ளது., 2010-இல், மலேசியாகினியின் தலைமைச் செய்தியாசிரியர் ஸ்டீபன் கான் அதனைப் பெற்றார்.

த சன் நாளேட்டின் ஆசிரியர் சைனோன் அஹ்மட்(2010) அதன் பத்தி எழுத்தாளர் ஆர். நடேஸ்வரன்(2009) ஆகியோரும் அவ்விருதைனைப் பெற்றுள்ளனர்.

TAGS: