டிஏபி ‘போர்’ வாகனம் ஜோகூரில் இன்று காணாமல் போனது

புதிதாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள டிஏபி-யின் மூன்று ‘போர்’ வாகனங்களில் ஒன்று இன்று அதிகாலையில் ஜோகூரில் காணாமல் போயுள்ளதாக ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ் அறிவித்துள்ளார்.

தாமான் துன் அமீனாவில் கடை வீடு ஒன்றுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனம் திருடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக பூ சொன்னார்.

“அந்த வாகனம் மாநில டிஏபி மகளிர் தலைவியின் கடை வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்தது. அவர்கள் இரவு 11 மணி வாக்கில் திரும்பிய போதும் அந்த வாகனம் அங்கு இருந்தது. ஆனால் காலை 7 மணி வாக்கில் அவரது புதல்வி வெளியில் சென்ற போது அந்த வாகனம் காணாமல் போய் விட்டதைக் கண்டார்,” என்றார் அவர்.

சாலை நெடுகிலும் அது போன்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் டிஏபியின் Ubah சின்னம் பெரிதாக வரையப்பட்டிருந்த அந்த வாகனம் மட்டுமே காணாமல் போயுள்ளது.

“அதே சாலையில் சில மரத் தளவாடப் பொருள் விற்பனைக் கடைகள் உள்ளன. அவை அது போன்ற வாகனத்தை வைத்துள்ளன. ஆனால் அவற்றை யாரும் தொடவில்லை. அதனால் டிஏபி வாகனம் காணாமல் போயிருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என நாம் கருதலாம்,” என்றும் டாக்டர் பூ சொன்னார்.

வன்முறை தவிர்ப்பதற்கு வாக்குறுதி

அந்த வாகனம் முக்கியச் சாலைக்கு மிக அருகில் இருந்ததால் அதனை எளிதாக ஒட்டிச் சென்றிருக்க முடியும் என அவர் மேலும் கூறினார்.

வாகனத்தில் டிஏபி-யின் உபகரணங்களும் பிரச்சார கையேடுகளும் இருந்தன.

பிகேஆர் பிரச்சாரப் பஸ் மீது அரசியல் வன்முறைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ள வேளையில் இந்தத் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளதை பூ சுட்டிக் காட்டினார்.

தேசியத் தேர்தலுக்கு முன்னதாக வன்முறையில் ஈடுபடுவதில்லை என அரசியல் களத்தில் இரு புறமும் உள்ள தரப்புக்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விரைவில் போலீசில் புகார் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

TAGS: