பிகேஆர் நம்பிக்கை செய்திகளைக் கொண்ட விளம்பரப் பலகைகளை வெளியிடுகின்றது

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிகேஆர் கட்சியின் நம்பிக்கை செய்தியை வழங்கும் புதிய விளம்பரப் பலகைகள் இயக்கத்தை அதன் தலைவர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் இன்று தொடக்கி வைத்துள்ளார்.

எதிர்த்தரப்புக் கூட்டணியின் கருப்பொருள் ‘பக்காத்தான் மக்கள் நம்பிக்கை’ என்பதாகும். அதற்கு இணங்க நம்பிக்கை செய்திகளை வழங்கும் இயக்கத்துடன் வரும் பொதுத் தேர்தலை வரவேற்பது அந்த முயற்சியின் நோக்கம் என்றார் வான் அஜிஸா.

‘வெறுக்கத்தக்க வாய்மொழி அவதூறுகளை’ கொண்ட பிஎன் தேர்தல் பிரச்சார இயக்கத்தை முறியடிப்பதும் இன்னொரு நோக்கமாகும்,” என்றும் அவர் சொன்னார்.

“எங்களுக்கு வேறு எந்த ஊடகமும் இல்லை. நாங்கள் பிஎன் -னின் டிவி3ம் உத்துசான் மலேசியாவுடன் போட்டியிட முடியாது.”

“நாங்கள் நாடு முழுவதும் விளம்பரப் பலகைகள் வழியாகவும் மின்னியல் ஊடகங்கள் வழியாகவும் எங்கள்செய்திகளைப் பரப்பி மக்களை சென்றடைய விரும்புகிறோம்.”

வாழ்க்கைச் செலவுகள், இலவசக் கல்வி, உயர்ந்த கார் விலைகள், மகளிர் வலிமையை உயர்த்துவது  ஆகியவை உட்பட பல்வேறு விஷயங்கள் அந்த சுவரொட்டிகளில் இடம் பெற்றிருக்கும்.

அதிகப் போக்குவரத்து உள்ள பகுதிகளில் அந்த சுவரொட்டிகளை வைக்க பிகேஆர் எண்ணியுள்ளது.

முதல் கட்டத்தில் 10 வகையான சுவரொட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டத்தில் கூடுதலாக வெளியிடப்படும்.

அந்த சுவரொட்டிகளை வைப்பதற்குத் தேவைப்படும் அனுமதிகளைப் பெறும் விஷயத்தைக் கவனிக்கச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிருபர்கள் சந்திப்பில் உடனிருந்த கட்சித் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் கூறினார்..

எதிரிகளுடைய பல வகையான ‘தீய’ தந்திரங்களை முறியடிப்பதற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபடுவது முக்கியமாகும் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

“நாங்கள் கொள்கைகள் வழி பிஎன் -உடன் தொடர்ந்து மோதுகிறோம். கொள்கைகளுக்கு எதிராக கொள்கைகளைச் சொல்கிறோம். வாக்காளர்களுக்குச் செய்திகளை அனுப்புவதின் மூலம் ஆரோக்கியமான அரசியலுக்கு ஊக்கமூட்ட நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் அவர்.

 

TAGS: