பக்காத்தான் மழையில் விளக்கக் கூட்டங்களைத் தொடக்கியது

பிஎன் கோட்டை எனக் கருதப்படும் நெகிரி செம்பிலானில் நேற்றிரவு நடத்தப்பட்ட பக்காத்தான் ராக்யாட் பேரணியில் மழையையும் பொருட்படுத்தாமல் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

சிரம்பான் ஜெயாவில் காலி நிலம் ஒன்றில் நிகழ்ந்த மக்கள் எழுச்சிக் கூட்டம் என அழைக்கப்பட்ட அந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான குடைகள் காணப்பட்டன.

அந்த நிகழ்வில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோர் உரையாற்றினார்கள். கிட்டத்தட்ட நள்ளிரவு வரையில் கூட்டம் நீடித்தது.

அன்வார் தமது உரையில் கிழக்கு மலேசியாவுக்குத் தாம் சென்ற போது புத்ராஜெயாவைப் பக்காத்தான் கைப்பற்றுவதைக் காண சபா, சரவாக் மக்கள் ஆவலோடு இருப்பதை கண்டதாகச் சொன்னார்.

மாற்றத்தைக் கொண்டு வருவதில் தங்களது கிழக்கு மலேசிய சகோதரர்களுடன் இணைந்து கொள்ளுமாறு  அவர் தீவகற்ப மலேசியர்களை கேட்டுக் கொண்டார்.

“கிழக்கு மலேசியர்கள் தயாராக இருக்கின்றனர் ? நீங்கள் எப்படி ?” என அன்வார் வினவிய போது கூட்டத்தினர் “நாங்கள் தயார்” என பதில் அளித்தனர்.

அடுத்த பொதுத் தேர்தல் ‘மிகவும் கறை படிந்ததாக’ இருக்கும் என எச்சரித்த அன்வார், ஆளும் கட்சி அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்கு போலி வாக்காளர்களைக் கொண்ட மாசு படிந்த வாக்காளர் பட்டியலை நம்பியுள்ளதாகச் சொன்னார்.

‘ஒபாமாவைப் பின்பற்றுங்கள். நாம் விவாதிப்போம்’

வாக்காளர் பட்டியல் எப்படி மாசு படிந்துள்ளது என்பதைக் காட்டுவதற்கு அன்வார் பெரிய திரையில் புரொஜெக்டர்களைப் பயன்படுத்தி எடுத்துக்காட்டுக்களைக் காட்டினார்.

“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் போலி வாக்காளர்களைக் கண்டு பிடிக்க நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும். ஆவி வாக்காளர்களை அனுமதிக்காதீர்கள். வாக்களிப்பை மில்லியன் கணக்கான மக்கள் கண்காணித்துக் கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.

நியாயமான தேர்தல்களுக்கு அவசியமான இன்னொரு விஷயம் ஊடகங்களில் குறிப்பாக தொலைக்காட்சி ஒளிபரப்பில் சமமான வாய்ப்புக் கொடுக்கப்படுவதாகும்.

அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்க்கட்சித் தலைவரானால் அவர் குறித்த செய்திகளை வெளியிடுவதிலிருந்து ஊடகங்கள் தடுக்கப்பட மாட்டா என அன்வார் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

“நாங்கள் புத்ராஜெயாவுக்கு சென்றவுடன் எதிர்த்தரப்புத் தலைவருக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்குவோம். அவரது வீட்டுக்கு நிருபர்கள் செல்ல அனுமதிப்போம். எதிர்த்தரப்புத் தலைவர் என்ற முறையில் அவர் எப்படி இருக்கிறார் எனக் கேட்க அனுமதிப்போம்,” என்றார் அவர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பாராக் ஒபாமா இரண்டாவது தவணைக் காலத்துக்குப் போட்டியிடுகிறார். அவர் தமது போட்டியாளரான மிட் ரோம்னியுடன் மூன்று முறை விவாதம் நடத்தியுள்ளார். அவை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அதற்கு நேர்மாறாக தம்மை தொலைக்காட்சி  விவாதத்தில் நேரடியாகச் சந்திக்கும் துணிச்சலோ நம்பிக்கையோ நஜிப்பிடம் இல்லை என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

நஜிப் சாதனைகள்

மக்களிடமிருந்து கட்டளையைப் பெறாமல் நீண்ட காலத்துக்கு பிரதமர் என்ற மகத்தான சாதனையை நஜிப் ஏற்படுத்தியுள்ளதாக லிம் அந்தக் கூட்டத்தில் கூறினார்.

“இரண்டாவது சாதனை நீண்ட நாடாளுமன்றக் கூட்டமாகும். மூன்றாவது மக்கள் இப்போது அவரை கடைசி பிஎன் பிரதமர் என அழைக்கத் தொடங்கியுள்ளனர்,” என லிம் சொன்னார்.

முதலாவது மக்கள் எழுச்சிக் கூட்டத்துக்கு கிடைத்த மகத்தான வரவேற்பைக் கண்டு பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, நெகிரி செம்பிலான் பக்காதானின் அடுத்தம் முன்னணி இலக்கு என அறிவித்தார்.

“நாங்கள் ஏன் நெகிரி செம்பிலானைத் தேர்வு செய்தோம் ? காரணம் அது எங்கள் அடுத்த இலக்கு. இரவு 7 மணி வாக்கில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் நாங்கள் மாநில அரசாங்கத் தலைமையகத்தில் இருப்போம்,” என்றார் அவர்.

அடுத்த பேரணி கிளந்தான் கோத்தா பாருவில் நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என்றும் முகமட் அறிவித்தார்.

பாகாங், கெடா, ஜோகூர், பேராக், மலாக்கா, பினாங்கு, பெர்லிஸ் ஆகியவற்றிலும் கூட்டங்களை நடத்தத் திட்டமிடுவதாக அவர் தெரிவித்தார்.

அந்த விளக்கக் கூட்டங்களுக்கு உச்சக்கட்டமாக புக்கிட் ஜலில் தேசிய அரங்கத்தில் ஜனவரி 12ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்படும்.

நேற்றைய சிரம்பான் நிகழ்வு 50,000 பேர் என்ற இலக்கை அடையாததால் தோல்வி என முக்கியப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் கூட்டத்தினர் எண்ணிக்கையில் அவற்றுக்கு இடையில் ஒருமைப்பாடு தென்பட்டது. பெரித்தா ஹரியான் 20,000 பேர் என்றும் சைனா பிரஸ் 30,000 என்றும் மதிப்பிட்டன.

 

TAGS: