அமெரிக்க அதிபர் தேர்தல்: போர்க்கள மாநிலங்களில் இறுதிக்கட்டப் பிரச்சாரம்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில், பிரதான கட்சிகளின் இரு வேட்பாளர்களான, பராக் ஒபாமாவும், மிட் ரோம்னியும் அமெரிக்காவின் ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் போர்க்கள மாநிலங்களில் கடைசி நேர சூறாவளி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை பின்னிரவில், அதிபர் ஒபாமாவும், முன்னாள் அதிபர் பில் கிளின்டனும் கூட்டாக முதன் முறையாக, கடும் மோதல் நடக்கும் வர்ஜீனியா மாநிலத்தில், தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினர்.

போட்டி மிகப் பலமானதாக இருப்பதாகக் கருதப்படும் இந்த மாநிலத்தில், பிரிஸ்டோ என்ற நகரில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஏறக்குறைய 25,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். டேவ் மேத்யூஸ் என்ற பிரபல இசைக்கலைஞரின் கச்சேரியுடன் தொடங்கிய இந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டம் ஜனநாயகக் கட்சியினருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் எனலாம்.

கூட்டத்தின் பிரதான பேச்சாளர், வேட்பாளர் பராக் ஒபாமாதான் என்றாலும், அதிகக் கைதட்டலும் ஆரவாரமும் என்னவோ முன்னாள் அதிபர் பில் கிளின்டன் உரையாற்றியபோதுதான் இருந்தது.

ஒபாமாவுக்கு ஆதரவாக கடுமையாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் கிளின்டன் தொண்டை கட்டியிருந்த கரகரத்த குரலில் பேசினார். ” என்னுடைய குரலை அதிபர் ஒபாமாவிற்கு சேவை செய்ய அர்ப்பணித்துவிட்டேன் ” என்றார் அவர் நகைச்சுவையாக.

2008-ல் பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்தபோடு சரிந்திருந்த அமெரிக்கப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஒபாமா எடுத்த முயற்சிகள் குறித்து கிளின்டன் அங்கு விவரித்தார்.

இந்தக் கூட்டத்தில் பின்னர் பராக் ஒபாமா பேசும்போது, தான் சொன்னதைச் செய்பவர் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

ஈராக்கில் போரை நிறுத்துவேன் அமெரிக்கப் படைகளை திரும்பக்கொண்டுவருவேன் என்ற உறுதிமொழியை நிறைவேற்றியது  போன்ற நிறைவேற்றப்பட்ட உறுதிமொழிகளை அவர் சுட்டிக்காட்டினார்.

கூட்டம் நடந்த இந்த இடம் வர்ஜீனியாவின் வட பகுதியில் இருக்கிறது. இந்த மாநிலத்தின் வட பகுதியில் ஜனநாயக் கட்சிக்கும், தெற்கே குடியரசுக் கட்சிக்கும் ஆதரவு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வர்ஜீனியா மாநிலத்திலிருந்து அதிபர் தேர்தலுக்கான தேர்ந்தெடுப்போர் அவைக்கு வர்ஜினியாவின் ரிச்மான்ட் நகரில் நேற்றுமுன்தினம், துணை அதிபர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் பால் ரையான் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றும் நடந்தது.

மிட் ரோம்னி நேற்றுமுன்தினம் நியூ ஹாம்ப்ஷையர், ஐயோவா மற்றும் கோலராடோ ஆகிய போர்க்கள மாநிலங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதிபர் ஒபாமா பொருளாதாரத்தை சரி செய்யத் தவறிவிட்டார் என்று அவர் குற்றம் சாட்டினார்.