முகநூலில் ஜோகூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பதிவிட்டிருந்த ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டது தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த இணைய செய்தித்தளங்களான மலேசியாகினி, மலேசியன் இன்சைடர் ஆகியவற்றுக்கு எதிராக ஜொகூர் போலீஸ் இரண்டு புகார்களைச் செய்துள்ளது.
27-வயதுடைய அளவு மதிப்பீட்டாளரான அவ்வாடவர் விசாரணைக்கு உதவியாக கோலாலும்பூர், வங்சா மாஜுவில் வெள்ளிக்கிழமை இரவு மணி 7.30க்குக் கைது செய்யப்பட்டார் என ஜோகூர் சிஐடி துணைத் தலைவர் நோர் அசிசான் அனான் தெரிவித்தார்.
அவரது அறிக்கை ஒன்றை பெரித்தா ஹரியான் வெளியிட்டிருந்தது.
அதில் அவர்,“….மலேசியன் இன்சைடரும் மலேசியாகினியும் விசாரணை மற்றும் கைது பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வெளியிட்டிருந்தன”,என்று குறிப்பிட்டார்.
“…ஜோகூர் போலீஸ் அச்செய்திகள் தொடர்பில் இரண்டு புகார்களைச் செய்துள்ளது. அவற்றின் அடிப்படையில் குற்றவியல் சட்டம் பகுதி 500-இன்கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது”.
கட்டுரை ஆசிரியர்களும் மேலே குறிப்பிடப்பட்ட சாட்சிகளும் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார்கள் என்று நோர் அசிசான் தெரிவித்திருந்தார். அவ்விரண்டு செய்தித்தளங்களும் எவ்வகையில் சட்டத்தை மீறின என்பது தெரிவிக்கப்படவில்லை.
மலேசியாகினி, அஹ்மட் அப்ட் ஜாலில் அரச நிந்தனைச் சட்டத்தின்கீழ் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நவம்பர் 3-இல் அறிவித்திருந்தது.
நேற்று ஜோகூர் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், அஹ்மட்டை விடுவிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், அவர் வேறொரு குற்றச்சாட்டின்பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டதாக அவரின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.