பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது

தடை செய்யப்பட்டுள்ள அல் அர்ஹாம் அமைப்பின் முன்னாள் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி ஒன்றின் தொடர்பில் பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பத்ருலாமின் பாஹ்ரோன் மீதும் மற்றும் 16 பேர் மீதும் ஜயிஸ் எனப்படும் இஸ்லாமிய விவகாரத் துறை டிசம்பர் 20ம் தேதி குற்றம் சாட்டவிருக்கிறது.

தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்துக்குப் புத்துயிரூட்ட முனைந்தது மூலம் 1995ம் ஆண்டுக்கான சிலாங்கூர் ஷாரியா குற்றவியல் சட்டத்தின் 12(சி) பிரிவை மீறியதாக அவர்கள் மீது குவாங் ஷாரியா நீதிமன்றத்தில்  குற்றம் சாட்டப்படும் என மலாய் மொழி நாளேடான சினார் ஹரியான், ஜயிஸ் இயக்குநர் மார்சுக்கி ஹுசின் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

“அதற்கு முன்னதாக அவர்கள் ஜயிஸ் அமலாக்க அதிகாரிகளுடைய விசாரணைகளில் ஒரு பகுதியாக தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்ட நாளன்று அவர்களுடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அடுத்து அவர்கள் குவாங்  ஷாரியா நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 1,000 ரிங்கிட் ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்,”என மார்சுக்கி சொன்னார்.

ரவாங்கில் உள்ள Country Homes பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் சோதனை மேற்கொண்ட ஜயிஸ் அதிகாரிகள் பத்ருலாமின் உட்பட 21 பேரை கைது செய்தனர். அந்த இசை நிகழ்ச்சி அல் அர்ஹாம் அமைப்பை தோற்றுவித்த காலஞ்சென்ற அஸ்ஹாரி முகமட் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது என ஜயிஸ் கூறிக் கொண்டுள்ளது.

அந்த நிகழ்வில் பங்கு கொண்டதின் மூலம் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தில் தொடர்புப் பிரிவு இயக்குநராக முன்பு பணியாற்றியுள்ள  பத்ருலாமின் கூறினார்.

TAGS: