ROS நடத்தும் விசாரணையில் தாம் இழுக்கப்பட்டதை புவா ஆட்சேபிக்கிறார்

மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீது  ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலகம் போலீஸ் துணையுடன் விசாரணைக்கு அழைத்துள்ள நபர்களில் பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா கடைசியாக அழைக்கப்பட்டுள்ளார்.

அது குறித்து ஆத்திரமடைந்துள்ள புவா,” இது மென்மேலும் அபத்தமாகி வருகின்றது. சுவாராமை விசாரிக்கும் துறையில் மூளையில்லாதவர்கள் வேலை செய்வதாக நான் நினைக்கிறேன்,” எனச் சொன்னார்.

“சுவாராம் மீது வழக்குப் போடுவதற்காக அவர்கள் மலேசியாவில் ஊழலையும் எதிர்த்துப் போராடுகின்றவர்களையும் மனித உரிமைகளைப் பாதுகாக்க முயலுகின்றவர்களையும் கூட அச்சுறுத்தி மிரட்டும் அளவுக்கு செல்கின்றனர்.”

அவர் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசினார்.

தமக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டதும் தாம் அதிர்ச்சி அடைந்ததாக அவர் சொன்னார். காரணம் சுவாராமுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டதைத் தவிர தாம் சுவாராம் நடவடிக்கைகளில் பங்கு கொண்டதே இல்லை என்றார் அவர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 111, 112வது பிரிவுகளின் கீழ் அந்த அழைப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது.

பெர்சே வழி காட்டிக் குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா, வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வா ஆகியோரை ஆர்ஒஎஸ் ஏற்கனவே விசாரணைக்கு அழைத்துள்ளது.

மரியாவும் லீ-யும் கூட அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.ஏனெனில் அவர்கள் ஒருபோதும் சுவாரமில் ஒர் அங்கமாக இருந்ததில்லை.