இஸ்லாத்தை விட்டு வெளியேறுமாறு முஸ்லிம்களை ஊக்குவிக்கும் அறிக்கையை பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் வெளியிட்டார் என்பது உண்மை என்றால் ‘இஸ்லாத்தை’ களங்கப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படலாம்.
இவ்வாறு பிரதமர் துறை துணை அமைச்சர் மாஷித்தா இப்ராஹிம் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் சமய நம்பிக்கையற்றவர்களாக மாறுமாறு மற்ற முஸ்லிம்களை ஊக்குவிப்பதைத் தடுக்கும் விதிகள் ஏதும் சட்டத்தில் இல்லை என்றாலும் அவ்வாறு நுருல் மீது குற்றம் சாட்டப்பட முடியும் என்றார் அவர்.
“முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களுக்கு சமயப் பிரச்சாரம் செய்வதைக் கட்டுப்படுத்துவதற்குச் சட்டம் உள்ளது. ஆனால் முஸ்லிம்களுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுத்து அதனை பின்பற்றுமாறு கூறிய பின்னரும் தங்கள் சமயத்தைத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்குமாறு முஸ்லிம் ஒருவர் கேட்டுக் கொள்ளும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது,” என அவர் சொன்னார்.
“அதனை எதிர்கொள்வதற்குச் சட்டத்தில் இடம் இல்லை என்றாலும் இஸ்லாத்தைக் களங்கப்படுத்துகின்றவர்கள் அல்லது இஸ்லாத்தை மற்றவர்கள் தாழ்வாகப் பார்ப்பதற்கு வகை செய்கின்றவர்கள் மீது பயன்படுத்தக் கூடிய சட்டவிதிகளின் கீழ் அதனை பார்க்க முடியும்.”

























