சமயச் சுதந்திரம் மீது பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ளதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய அறிக்கை மீது பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கருத்துறைக்க மறுத்துள்ளார்.
அந்த அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள உத்துசான் மலேசியா நம்பிக்கைக்குரிய வெளியீடு அல்ல என்பதே அதற்குக் காரணமாகும்.
“சமயத்தைத் தேர்வு செய்யும் சுதந்திரம் மீது பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா விடுத்த அறிக்கை தொடர்பில் என்னிடம் வினவப்பட்டது.”
“பொய்யான, துல்லிதமில்லாத செய்திகளை வெளியிட்டதற்காக பல முறை நீதிமன்ற வழக்குகளில் தோல்வி கண்டுள்ள பத்திரிக்கை ஒன்று முதல் பக்கத்தில் அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளதை நான் கண்டேன்.”
“ஆகவே அந்த பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் மட்டும் கருத்துச் சொல்வது பொருத்தமாக இருக்காது என நான் கருதுகிறேன்,” என நிக் அஜிஸ் நேற்றுத் தமது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
ஏற்கனவே பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு பின்பற்றிய அதே வழியை கிளந்தான் மந்திரி புசாரும் பின்பற்றியுள்ளதாகத் தோன்றுகிறது.
அந்த விவகாரம் மீது அதே காரணத்தின் அடிப்படையில் கருத்துத் தெரிவிக்க நேற்று முகமட் மறுத்தார்.
“நாம் முதலில் சோதனை செய்ய வேண்டும். ஏனெனில் அது உத்துசானிடமிருந்து வருகின்றது. வழக்குகளில் உத்துசான் எப்போதும் தோல்வி கண்டு வருகின்றது.”
அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா, நுருலைக் கண்டிக்கும் கருத்துக்களை தொடர்ந்து பெரிய அளவில் வெளியிடுவதுடன் தலைப்புச் செய்தியாகவும் போட்டு வருகின்றது.