அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் வர உள்ளது: சிகாகோவில் ஒபாமா வெற்றி உரை

சிகாகோ: அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் வர உள்ளது என மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து ஒபாமாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் ஒபாமாவை தொடர்பு கொண்ட மிட் ரோமினி, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதுடன் ஒபாமாவிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

பத்திரிகையாளர்களிடம் ரோம்னி கூறுகையில், மக்கள் தங்கள் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். என்னுடன் கடுமையாக உழைத்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை ஒபாமா சமாளிப்பார் என நம்புகிறேன். அமெரிக்கா மீது கொண்ட அக்கறை காரணமாக நான் தேர்தலில் போட்டியிட்டேன். இந்த நேரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என கூறினார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, சிகாகோ நகரில் உரையாற்றினார். அவர் பேசுகையில்;

“வெற்றி உங்களால் தான் கிடைத்தது. எனது வெற்றி அமெரிக்க மக்களின் வெற்றி. நாம் ஒற்றுமையாக இருந்து நாட்டை முன்னெடுத்துசெல்வோம். என்னை முன்னேற்றியதற்காகவும் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது மனைவி இல்லாமல் நான் உயர்ந்திருக்க முடியாது. அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் வர உள்ளது. நாம் அனைவரும் அமெரிக்க குடும்பங்கள். முன்னேறுவதிலும் வீழ்வதிலும் ஒற்றுமையாக இருப்போம்.”

“கவர்னர் ரோம்னிக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். அவருடன் இணைந்து செயல்பட்டு நாட்டை முன்னேற்றுவது குறித்து ரோம்னியுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். ரோம்னியுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரே எண்ணம் உள்ளது. மற்ற நாடுகளை விட அமெரிக்கா வளமானது. குடியரசு கட்சியுடன் இணைந்து பணியாற்றி நிதி நெருக்கடியை சமாளிப்போம் இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. அமெரிக்க ராணுவம் சிறந்தது. தேர்தல் பிரசாரத்தில் வலிமையான குழு ஈடுபட்டது. அமெரிக்க குழந்தைகள் கடன்கள் இல்லாத எதிர்காலத்தில் வாழ வேண்டும். பல்வேறு சிரமங்களுக்கு இடையே தான் நாம் உயர முடியும். முன்னேற்றப் பாதையை நோக்கி முன்னேறி செல்வோம். இனி வரும் காலங்களில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நடுத்தர வர்க்கத்தினருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்” என ஒபாமா கூறினார்.