குவாந்தான் எம்பி: இசி, வாக்காளர் பட்டியலைச் சீர்படுத்தும் வேலையை முறையாகச் செய்யவில்லை

தேர்தல் ஆணையம்,  வாக்காளர் பட்டியலில் செய்யப்படும் திருத்தங்களை முன்கூட்டியே தெரியப்படுத்துவதில்லை என்று பிகேஆர் கூறுகிறது.

குவாந்தான் எம்பி பவுசியா சாலே, குவாந்தானில் மட்டும் 155 பெயர்கள் திடீரென்று முளைத்துள்ளன, 433 பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன என்றார்.

“பல பெயர்கள் காரணமின்றி காணாமல்போய்விட்டன, பலரின் பெயர்கள் (மறுப்புத் தெரிவிப்பதற்கு வசதியாக) முதலில் காட்சிக்கு வைக்கப்படாமல் வேறொரு தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன”, என்றவர் கூறினார்.

“ஏதோ சூழ்ச்சி நடக்கிறது. இதனால் முடிவுகள் மாறலாம். அந்த 433பேரும் என்னுடைய வாக்காளர்களாக இருந்தால் என்னவாகும்?”

பவுசியா 2008-இல், 1826 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருந்தார். 

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய அவர், பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 155 பெயர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாத நிலையில் மீண்டும் பட்டியல் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

அவற்றில் ஒன்று 99-வயதுடைய லீ டீ என்பாரின் பெயராகும். அது 2011 பட்டியலில் நீக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனல் இன்று காலை பார்த்தபோது அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் அந்தப் பெயர் இருந்தது.

“நாங்கள் அது சரியா என்று விசாரித்துப் பார்த்தோம். அவரின் உறவினர்கள் அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். குவாந்தானில் 155 பேரில் 130 பேர் இப்படிப்பட்டவர்கள்தாம்.

“நாடு முழுக்க பார்த்தோமானால், நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட 40,786 பெயர்கள், அவை நீக்கப்படுவதற்கு  மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படாத நிலையிலும் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன”, என்றார்.

 

TAGS: