டாக்டர் மகாதீர்: மேற்கத்திய சுதந்திரங்கள் பேரிடர்களுக்கு வழி வகுத்து விடும்

சமய சுதந்திரம் உட்பட மேற்கத்திய இலட்சியங்களினால் மலேசியர்கள் “ஈர்க்கப்பட்டு விடக் கூடாது” என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார்.

சமயத்தில் கட்டாயம் கூடாது என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்த கருத்தை நிராகரித்த அவர், மேற்கத்திய சுதந்திரங்களை நாடுவது பல வகையான பேரிடர்களுக்கு வழி வகுத்து விடும் எனச் சொன்னார்.

“நாம் முஸ்லிம்கள். நாம் நமது சமயத்தை மாற்றுவதில்லை. மற்றவர்களுக்கு அவர்களுடைய நம்பிக்கைகள் அதற்கு அனுமதிக்கலாம். ஆனால் சுதந்திரம் குறித்த மேற்கத்திய சிந்தனைகளுக்கு நாம் பலியாகி விடக் கூடாது.”

“மிக அதிகமான சுதந்திரம் உள்ளது. இதற்குச் சுதந்திரம், அதற்குச் சுதந்திரம். மற்றவர்களுடைய சமயங்களை கேலி செய்யும் திரைப்படங்களைத் தயாரிக்கும் அளவுக்கு சுதந்திரம் சென்று விட்டது. நாம் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம்.”

“ஆகவே மேற்கத்திய சிந்தனைகளினால் கவரப்பட்டு விட வேண்டாம். ஆண்கள் ஆண்களை திருமணம் செய்வது. பெண்கள் பெண்களைத் திருமணம் செய்வது … குடும்பம் அழிக்கப்படுகின்றது.”

மலாய்க்காரர் அல்லாதாரைப் போன்று சமயச் சுதந்திரம் மலேசிய மலாய்க்காரருக்கு வழங்கப்பட வேண்டுமா என வினவப்பட்ட போது நுருல் தெரிவித்த கருத்துக்கள் பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அந்த முன்னாள் பிரதமர் அவ்வாறு கூறினார்.

அதற்கு நுருல்,” ஆம். நிச்சயமாக, நான் நடப்பு எண்ணங்களுக்குக் கட்டுப்பட்டுள்ளேன்,” என்றார்.

இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற, மலாய் மொழியை வழக்கமாக பேசுகின்ற, மலாய் பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ள நபர் ‘மலாய்க்காரர்’ என கூட்டரசு அரசமைப்பின் பிரிவு 160(2)ல் விளக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நுருல் சமய நம்பிக்கையற்ற நிலைக்கு ஊக்கமூட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதனை மறுத்துள்ளார்.

“ஒரு குடிமகன் கூட்டரசு அரசமைப்புக்கு கட்டுப்பட்டவர் என்பதைப் போல இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் ஒரு முஸ்லிம் ஷாரியாவுக்கு கட்டுப்பட்டவர் என்ற பொதுவான நிலையை நான் வலியுறுத்துகிறேன்.”

“சமய விஷயத்தை நான் இழிவுபடுத்துவதாக அல்லது சமய நம்பிக்கையை துறக்க முடிவு செய்த முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நான் சொன்னதாக என்னுடைய அறிக்கையைத் திரிப்பதற்கு சிலர் முயற்சி செய்வது எனக்கு வருத்தமளிக்கிறது,” என பிகேஆர் உதவித் தலைவருமான அவர் சொன்னார்.

TAGS: