மதிய உணவுக்கு முன்னர் துவா சொல்லத் தவறியதாகக் கூறப்பட்ட முஸ்லிம் அல்லாத ஒராங் 12 வயது அஸ்லி மாணவிகளை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது நடவடிக்கை ‘எடுக்கப்படுகின்றது’.
குழு நிலையில் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை நேற்று நிறைவு செய்து வைத்து பேசிய கல்வித் துணை அமைச்சர் அந்தத் தகவலை வெளியிட்டார்.
ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அவர் துல்லிதமாக தெரிவிக்கவில்லை.
“விசாரணைகள் தொடருகின்றன. சம்பவம் நடந்தது உண்மையே. நடவடிக்கை எடுக்கப்படுகின்றது,” என்றார் அவர்.
பூச்சோங் டிஏபி உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அவர், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அமைச்சுக்கு இருப்பதாகச் சொன்னார்.
“அந்த விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் எச்சரிக்கவும் நடப்பிலுள்ள நடைமுறைகளைப் பயன்படுத்த முடியும்.”
“குற்றம் இழைக்கப்பட்டிருந்தால் அந்த விவகாரத்தை விசாரிப்பது போலீசாரைப் பொறுத்ததாகும். போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன்,” என்றார் அவர்.
ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டதாக கூறப்பட்டதை மறுத்து அதற்கு அரசியல் சாயம் பூசப்படுவதாக கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சர் முகமட் ஷாபி அப்டால் கூறியுள்ளதற்கு மாறாக வீ-யின் அறிக்கை அமைந்துள்ளது.
மன்னிப்பு கேட்கப்பட்டது
கடந்த அக்டோபர் 23ம் தேதி பிஹாய் தேசியப் பள்ளிகளைச் சேர்ந்த நான்கு ஆறாம் வகுப்பு மாணவிகளை ஆசிரியர் கன்னத்தில் அறைந்தார். அதனைத் தொடர்ந்து அவர்களுடைய பெற்றோர்கள் தங்கள் கிராமத்திலிருந்து மூன்று மணி நேரம் பயணம் செய்து குவா மூசாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
கிளந்தான் பேராக் எல்லைக்கு அருகில் குவா மூசாங் உட்புறப் பகுதியில் ஒராங் அஸ்லி பிள்ளைகளுக்கு மட்டுமான அந்தப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.
பெற்றோர்களுடைய முன் அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஒராங் அஸ்லி பிள்ளைக்கும் சமயக் கல்வி போதிக்கப்படக் கூடாது என 1954ம் ஆண்டுக்கான பழங்குடி மக்கள் சட்டத்தின் 17வது பிரிவு குறிப்பிடுகின்றது.
அந்தப் பிரிவை மீறுகின்றவர்களுக்கு 500 ரிங்கிட்டுக்கு மேற்போகாத அபராதம் விதிக்கப்பட வேண்டும் என பிரிவு 17 (3) கூறுகின்றது.
கிளந்தான் கல்வித் துறை, ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை ஆகியவை அந்தச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளன.
“நல்ல பழக்கத்துக்காக பிரார்த்தனையைச் சொல்லுமாறு பிள்ளைகளுக்கு ஊக்கமூட்டப்படுகின்றது. ஆனால் இஸ்லாமிய பாணியில் இருக்க வேண்டும் என அவசியமில்லை என அந்த இரண்டு அரசு அமைப்புக்களும் கூறிக் கொண்டன.