நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் அல்லாதவர்கள் நிருபர்கள் கூட்டத்தை நடத்துவதற்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை தாம் அம்பலப்படுத்தி வருவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டது என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார்.
“நஸ்ரி அத்தகைய நடவடிக்கையை எடுப்பார் என நான் ஏற்கனவே கணித்திருந்தேன். நாடாளுமன்றத்தில் நான் நிருபர்களை சந்திப்பதைத் தடுப்பதற்கு அவர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவார் என நான் எதிர்பார்த்தேன்.”
“நாடாளுமன்றத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிருபர்கள் சந்திப்புக்கள் நஸ்ரியையும் சம்பந்தப்படுத்தும் என்பதால் அவர் மீண்டும் சுய நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்,” என ராபிஸி விடுத்த அறிக்கை கூறியது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள ஊடகப் பகுதியைப் பயன்படுத்தக் கூடாது என இன்று காலை நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்தார்.
நஸ்ரியின் புதல்வர் பயன்படுத்தும் 459,000 ரிங்கிட் பெறும் Hummer SUV ரகக் கார் வழியாக நஸ்ரிக்கும் மைக்கல் சியா என்ற வணிகருக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் ராபிஸி தெரிவித்திருந்தார்.
ஹாங்காங்கிலிருந்து நாட்டுக்குள் சபா அம்னோவுக்காக என்று கூறப்பட்ட 40 மில்லியன் ரிங்கிட் நிதிகள் கொண்டு வரப்பட்டதற்குப் பின்னணியில் இருந்தவர் சியா ஆவார்.