‘போரினால் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காக மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு’

இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு ஒன்றை நிறுவி, பிராந்திய அளவில் முரண்பாடுகள் அற்ற வகையில் செயல்பட்டு வரும் மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

2009-ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மிக மோசமான இலங்கை இராணுவ தாக்குதலில் இருந்து தப்பி, தற்காலிக முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த  நான்கு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.

தங்களது வீடு, நிலம், உடைமைகள் அனைத்தையும் பறி கொடுத்த நிலையிலும், குடும்பங்கள் சின்னாபின்னமாக்கப்பட்ட நிலையிலும் வாழ்வாதாரத்திற்குப் போராடும் தமிழர்களுக்கு  இந்த மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு தகுந்த இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கும் என்கிறார் அதன் தலைவர் டத்தோ ஜொஷாரி அப்டுல். இவர் சுங்கைப்பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

இந்த நாடாளுமன்றக் கூட்டமைப்புக்குச் செயலாளராக தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் மாரிமுத்து செயல்படுவார். இந்த அமைப்பின் மூலம் இடம் பெயர்ந்த மக்களுக்காக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் மனித உரிமை சார்புடைய நடவடிக்கைகளை மலேசியா கண்காணிக்க இயலும் என்கிறார் ஈப்போ பாராட்  நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன்.

மேலும்,  இந்த கூட்டமைப்பில் பொக்கோ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மாபூஸ் ஒமார், கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தோங் இம், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா, பாலேக் புலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் யுஸ்மாடி, செனட்டர் இராமகிருஷ்ணன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து செம்பருத்தியிடம் கருத்துரைத்த சுவாராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்; “இன்று மலேசிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. தமிழர்கள் பிரச்னையை மனித உரிமைகள் அடிப்படையில், பல்லினங்களைச் சார்ந்த ந¡டாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளது பாராட்டத்தக்கதோடு அவர்களது முதிர்ச்சியையும் காட்டுகிறது” என்றார்.

TAGS: