நேற்றிரவு பிரிக்பீல்ட்ஸில் பிகேஆரின் தீபாவளி நிகழ்வுக்கு அதிகாரிகளால் பல இடையூறுகள். ஆனாலும், அந்நிகழ்வுக்கு வருகை புரிந்த பிகேஆர் நடப்பில் தலைவருக்கு உற்சாகமான வரவேற்பு காத்திருந்தது.
500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விடாமல் பெய்த மழையிலும் இரவு மணி 9.30வரை காத்திருந்து அன்வாரை வரவேற்றனர்.
ஜெலஜா மெர்டேகா ரக்யாட் பேருந்தில் அன்வார் அங்கு வந்து சேர்ந்ததும் அவரைக் காண நூற்றுக்கணக்கானவர் பேருந்தைச் சூழ்ந்துகொண்டதால் அங்கு சற்று நேரம் குழப்பம் நிலவியது.
அதற்கு முன்னதாக, பிகேஆர் உதவித் தலைவரும் லெம்பா பந்தாய் எம்பியுமான நுருல் இஸ்ஸா அன்வார், அந்நிகழ்வுக்காக ஒரு மேடை அமைக்க கோலாலம்பூர் மாநராண்மைக் கழகம் (டிபிகேஎல்) அனுமதி அளிக்க மறுத்தது குறித்து கட்சி ஏமாற்றம் அடைவதாகக் குறிப்பிட்டார்.
“இந்த ஆண்டும் டிபிகேஎல் அணுசரணையாக நடந்துகொள்ளவில்லை. இதனால் தீபாவளியை வழக்கத்துக்கு மாறாக இப்படிக் கொண்டாட வேண்டியுள்ளது”, என்றார்.
“டிபிகேஎல் ஆதரவோ ஒத்துழைப்போ தரவில்லை. மாறாக, பிரச்னைகளைத்தான் ஏற்படுத்தியது. எங்கள் கொடிகள் இறக்கப்பட்டன; தீபாவளிக்கென்று மேடை அமைக்கவும் எங்களுக்கு அனுமதி இல்லை”, என்று நுருல் அந்நிகழ்வுக்கு முன்னதாக மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஒரு மாதமாக கட்சி அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்து வருகிறது. ஆனால், அனுமதி கிடைக்கவில்லை என்றாரவர்.
‘குட்டி இந்தியா’ என்றழைக்கப்படும் பிரிக்பீல்ஸுக்கு வருகை புரிந்த அன்வார் அங்குள்ள கடைகளைச் சுற்றி வந்தார். அவரைப் பெரும் கூட்டமும் பின்தொடர்ந்தது.
இதனிடையே, அன்வார் வந்த பேருந்து நெரிசல்மிக்க ஜாலான் தும் சம்பந்தனில் ஒரு சந்தில் நிறுத்தப்பட்டு ஒரு மேடையாக மாற்றப்பட்டது. அதிலிருந்து நுருல், கட்சி உதவித் தலைவர் என்.சுரேந்திரன், சுபாங் எம்பி, ஆர்.சிவராசா ஆகியோர் கூட்டதாரிடையே பேசினார்கள்.
ஒரு மணி நேரம் கழித்து அன்வார் தம் உலாவை முடித்துக்கொண்டு திரும்பினார்- தலையில் தலைப்பாகை, கழுத்தில் பெரிய சங்கிலி, மலர்மாலைகள் சகிதமாக.
ஐந்து நிமிடம் சுருக்கமாக பேசினார். பிஎன் அரசு ஊழல் மிக்கது.எனவே, அதற்கெதிராக வாக்களியுங்கள் என்று வலியுறுத்தினார்.
“இங்கு வியாபாரத்தைக் கெடுக்க விரும்பவில்லை. அதனால் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்”, என்றார்.
பிரிக்பீல்ட்ஸ் வருகையை முடித்துக்கொண்டு நேராக பண்டார் துன் ரசாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு செராமாவுக்குச் சென்றார் அன்வார். அங்கு மழைநீர் நிரம்பி நின்ற கால்பந்தாட்டத் திடல் ஒன்றில் சுமார் 1,500 ஆதரவாளர்கள் அவருக்காகக் காத்திருந்தனர்.அவர்களிடையே அன்வார் பேசினார். அவரது பேச்சில் கிண்டலும் கேலியும் கலந்திருந்தது.
“(பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக் ஏதாவது சொல்வார். சரி வாருங்கள், அதைப் பற்றி விவாதிப்போம் என்றால் வர மாட்டார்.
“பள்ளிகளில் பிள்ளைகளுக்கு நன்றாக பேசக் கற்றுக்கொடுக்க வேண்டும், பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்பார். ஆனால் (அன்வாருடன்) விவாதம் என்றால் அது நம் கலாச்சாரம் அல்ல என்பார்.
“எது நம் கலாச்சாரம்? பேருந்தின்மீது கற்களை விட்டெறிவதா, பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை நோக்கி பிட்டத்தை அசைத்து ஆடுவதா?”, என்று அன்வார் வினவினார்.
அன்வார் தமதுரையில் எரிபொருள் விலைக் குறைப்பு, இலவச கல்வி, கார்களுக்கான சுங்க வரி நீக்கம் முதலிய பிகேஆரின் தேர்தல் வாக்குறுதிகளையும் வலியுறுத்தினார்.