நாடற்ற இந்தியர்களுக்காக அடுத்த மாதம் பேரணி, பிகேஆர் நடத்துகிறது

பிகேஆர், இந்நாட்டில் நாடற்றவர்களாக உள்ள இந்தியர்களின் பிரச்னைகளைக் கவனிக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்க பேரணி ஒன்றை ஏற்பாடு செய்யும்.

இதனைத் தெரிவித்த பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், பேரணி புத்ராஜெயாவில் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) தலைமையகத்தில் டிசம்பர் 5-இல், காலை மணி 10-க்கு நடைபெறும் என்றார்.

“என்ஆர்டிக்குச் செல்வோம், எல்லாப் பிரச்னைகளும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

“அங்கு கூடாரங்களைக் கொண்டு செல்வோம், உணவுப் பொருள்களைக் கொண்டு செல்வோம். பிரச்னைக்குக் கூட்டரசு அரசாங்கம் தீர்வுகாணும்வரை அங்கிருந்து நகர மாட்டோம்”, என்று செய்தியாளர் கூட்டமொன்றில் சுரேந்திரன் கூறினார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அரசாங்கமும் அப்பிரச்னைக்குத் தீர்வுகாண இன்னும் அவகாசம் இருக்கிறது என்று கூறிய அந்த மனித உரிமை போராட்ட வழக்குரைஞர், அப்பேரணியே தங்கள் பிரச்னையை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் இந்தியர்களின் கடைசி முயற்சியாக இருக்கும் என்றார்.

“ஆயிரக்கணக்கானவர்களை நாங்கள் புத்ரா ஜெயாவுக்கு அழைத்துச் செல்வதற்காக நஜிப்பும் அரசாங்கமும் எங்களைக் குறை சொல்லக்கூடாது.எங்களுக்கு வேறு வழி இல்லை”, என்று குறிப்பிட்ட அவர் பேரணிக்கு மக்களைத் திரட்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

“அது திட்டமிட்ட முயற்சியாகும்”

இன்று நடைபெற்ற அச்செய்தியாளர் கூட்டத்தில் பிகேஆர் சட்ட விவகாரப் பிரிவுத் தலைவர் லத்திபா கோயா, கட்சியின் மனித உரிமை, சட்டப் பிரிவு துணைத் தலைவர் எஸ்.ஜெயதாஸ் ஆகியோரும் குடியுரிமை பெறுவதில் பிரச்னைகளை எதிர்நோக்கும் பலரும் கலந்து கொண்டனர்.

அரசாங்கமும் மஇகாவும் நாடற்றவர்களாக உள்ள இந்தியர் எண்ணிக்கை 10,000-இலிருந்து 20,000-க்குள் இருக்கலாம் என்று திரும்பத் திரும்பக் கூறினாலும் அந்த எண்ணிக்கை இன்னும் பெரியதாக, சுமார் 300,000-ஆக இருக்கலாம் என்றார் சுரேந்திரன்.

பாரிசான் நேசனலும் அரசாங்கமும் திட்டமிட்டே இந்தியர்களை ஓரங்கட்டி வந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

“இந்தியர்களை ஓரங்கட்டுவது நஜிப்பினதும் பிஎன் அரசாங்கத்தினதும் திட்டமிட்ட முயற்சியாகும். இந்திய சமூகத்தினருக்கு முறையான கல்விகூட மறுக்கப்படுகிறது.

“இது கடுமையான குற்றச்சாட்டுத்தான். ஆனால், நான் சொல்வது உண்மை. முடிந்தால் அரசாங்கம் மறுக்கட்டும்”, என்றவர் சவால் விடுத்தார்.

TAGS: