நஜிப் கூட்டத்தைப் புறக்கணியுங்கள் என ஹிண்ட்ராப் சட்ட ஆலோசகர் வேண்டுகோள்

நஜிப் அப்துல் ரசாக்-உடனான சந்திப்பை புறக்கணிப்பதற்கு ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தியையும் அவரது மூத்த சகோதரர் உதயகுமாரையும் அந்த அமைப்பின் சட்ட ஆலோசகர் எம் மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

2007ம் ஆண்டு உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களில் மனோகரனும் ஒருவர் ஆவார். அவர் கோத்தா அலாம் ஷா தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

பிஎன், அம்னோ அரசாங்கம் இது வரை செய்துள்ளவற்றை இந்திய சமூகம் மறக்கக் கூடாது என அவர் சொன்னார்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற தமிழ்ப் பழமொழியை மேற்கோள் காட்டிய மனோகரன், ஐந்து வயதில் மாறாத ஒரு குழந்தையை நீங்கள் ஐம்பது வயதில் மாற்ற முடியாது என்றார்.

“நஜிப் பல ஆண்டுகளாக அமைச்சரவையில் இருந்து வந்துள்ளார். அதனால் அவர் பெரிய அளவில் மாறுவார் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. ஆகவே பிரதமரைச் சந்திக்க வேண்டாம் என நான் இரண்டு ஹிண்ட்ராப் தலைவர்களுக்கு அறிவுரை கூறுகிறேன்.”

பிஎன் அம்னோ அரசாங்கம் செய்துள்ள கொடூரங்களை சமூகம் மறக்கக் கூடாது என்றும் மனோகரன் குறிப்பிட்டார். பல கோயில்கள் இடிக்கப்பட்டன. அரசு சேவையில் குறைவான வாய்ப்புக்களே இந்தியர்களுக்குக் கொடுக்கப்பட்டன. சிம்பாங் ரெங்காம், மாச்சாங் ஆகியவற்றில் உள்ள தடுப்புக் காவல் மய்யங்களில் பதின்ம வயதினர் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என  அவர் தெரிவித்தார்.

கம்போங் மேடான் வன்முறையும் இருப்பதாக அவர் சொன்னார். அதனை அதிகாரிகள் அங்கீகரிக்க மறுத்துள்ளனர். போலீஸ் தடுப்புக் காவலில் நூற்றுக்கணக்கான பேர் இறந்துள்ளனர். இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட பல துப்பாக்கிச் சூட்டு மரணங்களும் நிகழ்ந்துள்ளன என்றும் மனோகரன் குறிப்பிட்டார்.

டாக்டர் மகாதீர் முகமட் இந்த நாட்டை ஆட்சி புரிந்த 22 ஆண்டுகள் இந்தியர்களுக்கு மிக மோசமான காலம் என அவர் வருணித்தார்.

“ஆகவே நாம் அதனை நினைவில் கொள்ள வேண்டும். பிரதமரை சந்திப்பது இல்லை என முடிவு செய்ய வேண்டும்,” என்றார் அவர்.

இந்திய சமூகத்து பிரச்னைகளை விவாதிக்கும் பொருட்டு ஹிண்ட்ராப்பை சந்திக்க நஜிப் தயாராக இருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் விடுத்துள்ள அறிக்கை பற்றி மனோகரன் கருத்துரைத்தார்.

ஹிண்ட்ராப் பேச்சுக்களுக்கு இணங்குவதற்கு முன்னர் ஹிண்ட்ராப் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என வேதமூர்த்தி கூறியுள்ளார். அதே வேளையில் ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாக அரசாங்கம் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பத்து மலையும் ஹிண்ட்ராப் ஒடுக்கப்பட்டதும்

2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி இரவு இந்துக்களுடைய புனிதத் தலமான பத்துமலையில் போலீசார்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அவிழ்த்து விட்ட அடக்குமுறை நடவடிக்கைகளையும் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும் மனோகரன் குறிப்பிட்டார்.

“அது அதிகாரிகளின் ‘சிறிய அளவிலான படுகொலையாக’ இருந்தது. அதனைத் தொடர்ந்து கோலாலம்பூரில் அடுத்த நாள் பேரணி நடத்தப்பட்டது,” என அந்த டிஏபி வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் நிகழ்ந்த போதிலும் கொலை செய்வதற்கு முயற்சி செய்யப்பட்டதாக சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லே 31 பேர் மீது குற்றம் சாட்டினார் என்றார் அவர்.

பின்னர் டிசம்பர் மாதம் அந்த கொலை முயற்சி குற்றச்சாட்டை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மீட்டுக் கொண்டது.

அந்தப் பேரணியின் விளைவாக தாமும் உதயகுமாரும் வி கணபதிராவ், ஆர் கெங்காதரன், அமைப்புச் செயலாளர் டி வசந்த குமார் ஆகிய ஹிண்ட்ராப் தலைவர்களும் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாக மனோகரன் குறிப்பிட்டார்.

“பிஎன் அம்னோ அரசாங்கம் செய்த அவற்றை மறக்கக் கூடாது.”

அரசாங்கம் ஹிண்ட்ராப்பை சந்திப்பதில் அக்கறை கொண்டிருந்தால் அது கடந்த 50 ஆண்டுகளாக தான் செய்தகாரியங்களுக்காக எல்லா இந்தியர்களிடமும் முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார் அவர்.

அந்தத் தவறுகளுக்காக எல்லா இந்தியர்களுக்கும் இழப்பீடு கொடுக்கவும் அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்றும் மனோகரன் கூறினார்.

“பழங்குடி மக்களுக்கு செய்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கேட்க ஆஸ்திரேலியப் பிரதமர் தயாராக இருக்கும் போது இந்திய சமூகத்துக்கு செய்த காரியங்களுக்காக மலேசிய அரசாங்கம் அதனை ஏன் செய்யக் கூடாது,” என அவர் வினவினார்.

ஆனால் எவ்வளவு இழப்பீடு கோரப்பட வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

TAGS: