மலேசியாகினி அலுவலகத்துக்கு மீண்டும் வந்த போலீசார், எழுத்தாளருடைய மின் அஞ்சலுடன் வெளியேறினர்

மலேசியாகினி அலுவலகத்துக்கு போலீசார் இன்று பிற்பகல் இரண்டாவது முறையாக வருகை அளித்து பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்த “இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை” என்ற கருத்து தொடர்பில் வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் மீதான விசாரணையை தொடர்ந்தனர்.

அவர்கள் மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான்-ஐயும் தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரனையும் மூத்த ஆசிரியர் பாத்திஸ் அரிஸ் ஒமாரையும் சந்தித்தனர்.

மலேசியாகினி நிர்வாகத்துடன் மனித உரிமை வழக்குரைஞர் முர்னி ஹிடாயா அனுவாரும் இருந்தார். அந்தக் கடிதத்தை எழுதிய ஸ்டீவ் ஒ-வின் இணக்கத்துடன் மலேசியாகினி அவருடைய மின் அஞ்சல் முகவரியை போலீசாருக்குக் கொடுத்தனர்.

“நீங்கள் உங்கள் கணினிகளை இழப்பதைக் காண நான் விரும்பவில்லை. ஆகவே தயவு செய்து போலீசாரிடம் என்னுடைய மின் அஞ்சல் முகவரியை தாரளாமகக் கொடுங்கள். அவர்களுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்புக் கொடுங்கள்,” என ஒ தமது திறந்த மடலில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் போலீசார் புறப்பட்டுச் சென்றனர். நேற்று மூன்று மலேசியாகினி பணியாளர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது போல இன்று எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

சுபாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த முதுநிலை விசாரணை அதிகாரி ஏஎஸ்பி நாட்ஸ்ரி  அருண் தலைமையில் ஏழு போலீஸ் அதிகாரிகள் இன்று வந்தனர். நேற்று 15 பேர் கொண்ட போலீஸ் குழு வருகை அளித்தது.

அவர்கள் கோலாலம்பூர் பங்சார் உத்தாமாவில் உள்ள மலேசியாகினி தலைமையகத்துக்கு மாலை மணி 4க்கு வந்தனர். மாலை மணி 4.30க்கு அங்கிருந்து புறப்பட்டனர்.

தேடுவதற்கான ஆணை

போலீசார் மலேசியாகினிக்கு வந்ததும் குற்றவியல் சட்டத்தின் 298வது பிரிவின் கீழ் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் பிறப்பித்த தேடும் ஆணையைக் காட்டினார்கள்.

நேற்றைய தேடும் ஆணை தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டதாகும். அது போலீஸ் தரப்பில் தவறாக இருந்திருக்க வேண்டும்.

ஆகவே புலனாய்வு குற்றவியல் சட்டத்தின் 298வது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அல்ல என்றும் நாட்ஸ்ரி விளக்கினார்.

அந்தப் பிரிவு “எந்த ஒரு நபருடைய சமய உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் வார்த்தைகளைச் சொல்வது” மீதான  குற்றம் சம்பந்தப்பட்டதாகும்.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஒருவருக்கு ஒராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

புலனாய்வு செய்யப்படும் கடிதம் ஒ எழுதியதாகும். ‘Nurul’s watershed idea for the nation’ என்னும் தலைப்புடன் அந்தக் கடிதத்தை மலேசியாகினி திங்கட்கிழமை வெளியிட்டது.

நேற்று போலீசார் 90 நிமிடங்கள் மலேசியாகினி அலுவலகத்தில் இருந்தனர். அவர்கள் பாத்தி, செய்தி ஆசிரியர் ஜெரால்ட் மார்ட்டினெஸ், மனித வள நிர்வாகி ஏ ஷாமினி ஆகியோருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்கள்.

போலீசாருடன் இன்றைய சந்திப்பு மிகவும் சரளமாக இருந்தது என கான் வருணித்தார்.

“எங்கள் கணினிகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆகவே எங்கள் வேலைகள் பாதிக்கப்படவில்லை,” என்றார் அவர்.

2003ம் ஆண்டு போலீசார் மலேசியாகினியை சோதனை செய்தனர். அப்போது 19 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வாசகர் ஒருவர் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் ஒன்றுடன் அந்தச் சம்பவம் தொடர்புடையதாகும்.

ஆனால் எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. இறுதியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த விவகாரம் மூடப்பட்டு விட்டது.

TAGS: