-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், நவம்பர் 9, 2012.
நாட்டின் பொதுத்தேர்தல் எந்தநேரத்திலும் நடைபெறலாம். அரசியல் தலைவர்கள், மக்களின் வாக்குகளைப் பெற என்னவெல்லாமோ செய்யலாம் என்கிற நிலை உருவாகிவிட்டது.
1974-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. மலேசிய சீனர்களின் வாக்குகள் மிக முக்கிய கட்டத்தை அடைந்த நேரம் அது.
அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் யோசித்தார். சீனாவுக்குச் சென்று கம்யூனிஸ்ட் தலைவர் மா சே துங்கைப் பார்த்து உதவி கேட்டால் என்ன?
உடனே சீனாவுக்கு பயணமானார் துன் அப்துல் ரசாக். கம்யூனிஸ்டுகளின் பீரங்கியான மா சே துங்குடன் கலந்தாலோசித்தார்.
மலேசிய தேர்தல் வந்தது. சீனர்கள் வாழும் புதுக்கிராமங்களில் பாரிசான் சின்னம் பொதித்த போஸ்டர்கள் இருந்ததோ இல்லையோ, மா சே துங்கும், துன் ரசாக்கும் கைகுலுக்கிக் கொள்ளும் போஸ்டர்கள் நிரம்பி வழிந்தன. (கம்யூனிஸ்ட் சித்தாந்தம் நமது நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை இங்கே கருத்தில் கொள்ளவும்.)
இதே போன்று நமது நாட்டில் அரசு அங்கீகாரம் பெறாத ஓர் இயக்கம்தான் ஹிண்ட்ராப்.
எந்த நேரத்திலும் நமது நாட்டில் அடுத்தப் பொதுத் தேர்தல் நடைபெறலாம். மலேசிய இந்தியர்களின் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந்துள்ளதை 55 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஆளும் தேசிய முன்னணி உணர்ந்துள்ளது.
ஆகவே, தேசிய முன்னணியின் தலைவர் நஜிப் யோசித்தார். தன் தந்தை துன் அப்துல் ரசாக் போன்றே தானும் முடிவெடுத்தார். இந்தியர்களின் வாக்குகளைப் பெற ‘ஹிண்ட்ராப்’ முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்தார்.
வேறுவழியில்லை, ஹிண்ட்ராப் அங்கீகாரம் பெற்றதா, இல்லையா என ஆராய இது நேரமில்லை. ஹிண்ட்ராப்புக்கு சிவப்பு கம்பளம் விரித்தே ஆகவேண்டும் என்று கோதாவில் இறங்கிவிட்டார், தேசிய முன்னணியின் தலைவரான நஜிப்.