எம்ஏசிசி: பாலா கூறும் கையூட்டு விவகாரத்துக்குப் போதுமான ஆதாரமில்லை

சுயேச்சை துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம், தமக்குக் கையூட்டு கொடுக்கப்பட்டதாகக் கூறுவதை வைத்து எவர்மீதும் குற்றம்சாட்ட  ஆதாரங்கள் போதாது  என அரசாங்க வழக்குரைஞர் கருதுகிறார்.

தம் புகார் என்னவாயிற்றென்று கேட்டிருந்த பாலாவுக்கான பதிலாக அவரின் வழக்குரைஞர் அமெரிக் சித்துவுக்கு அனுப்பிய கடிதத்தில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

எம்ஏசிசி அதன் மறுமொழியில், “முழுமையான விசாரணை நடத்தி” விசாரணை அறிக்கை அரசு வழக்குரைஞரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறியது.

“மொத்த ஆதாரங்களையும் கூர்ந்து ஆராய்ந்த அரசு வழக்குரைஞர் எவர்மீதும் குற்றம் சுமத்த ஆதாரங்கள் போதுமானவை அல்ல என்ற முடிவுக்கு வந்தார்”, என எம்ஏசிசி குறிப்பிட்டது.

பாலா, சில தரப்புகள் மங்கோலிய மொழிபெயர்ப்பாளரான அல்டன் துயாவின் கொலை விவகாரத்தில் பக்காத்தான் தலைவர்களைத் தொடர்புப் படுத்தச் சொல்லி தமக்குக் கையூட்டு கொடுத்ததாக செய்திருந்த புகாருக்கு மறுமொழி கேட்டு எம்ஏசிசிக்கு வழக்குரைஞர் மூலமாக கடிதம் அனுப்பி இருந்தார்.

தம் பாதுகாப்புக்கு அஞ்சி இந்தியாவில் மறைந்து வாழும் பாலசுப்ரமணியம், 2008-இல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அல்டான்துன்யாவுடன் சம்பந்தப்படுத்தி தாம் செய்திருந்த சத்திய பிரமாணம் தொடர்பில் தமக்குக் கையூட்டு கொடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அம்பலப்படுத்தப்போவதாக கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.

எம்ஏசிசி, அதன் மூன்று-பாரா பதிலில் அரசு வழக்குரைஞரின் முடிவுடன் தான் ஒத்துப்போவதாகக் கூறியது.

“விசாரணையில் கண்டறிந்த விசயங்களும் முடிவுகளும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களைக் கொண்ட ஒரு மேற்பார்வைக் குழுவான எம்ஏசிசியின் நடவடிக்கை மறுஆய்வு வாரியத்திடம் தாக்கல் செய்யப்பட்டன.

“அவ்வாரியமும் அரசு வழக்குரைஞர் முடிவுடன் ஒத்துப்போனது”, என்று அக் கடிதம் குறிப்பிட்டது.

TAGS: