முகநூல் பதிவு வழி ஜோகூர் சுல்தானை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அகமட் அப்துல் ஜலில் ஜோகூர் பாரு போலீஸ் நிலையத்தில் ஏழு நாட்களுக்கு தனிமையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் இன்று அகமட் தமது தடுப்புக் காவல் அனுபவங்களை விவரித்தார்.
தாம் வைக்கப்பட்டிருந்த சிறைய அறை மிகவும் வெப்பமாக இருந்தது என்றும் மின் விசிறி கிடையாது என்றும் கூரைக்கு அருகில் சிறிய ஜன்னல் மட்டுமே இருந்தது என்றும் அவர் சொன்னார்.
அந்தச் சிறையில் இருந்த போது தேவைப்பட்ட போது தம்மை கழிப்பறைக்குக் கொண்டு சென்ற போலீஸ்காரர்களைத் தவிர வேறு யாரையும் தாம் சந்திக்கவில்லை என்றும் அகமட் தெரிவித்தார்.
“அந்த அறை மிகவும் வெப்பமாக இருந்தது. என்னால் தூங்கக் கூட முடியவில்லை. அங்கு மொத்தம் 12 அறைகள் இருந்தன. ஆனால் ஒருவரை ஒருவர் பார்க்கவும் முடியாது பேசவும் முடியாது. நான் எந்த ஆன்மாவையும் பறவையையும் ஏன் மரத்தைக் கூட பார்க்கவில்லை,” என அந்த 27 வயது கட்டுமான மதிப்பீட்டாளர் சொன்னார்.
“நான் என் குடும்பத்தையும் வழக்குரைஞரையும் பார்க்க வேண்டும் என அன்றாடம் மன்றாடுவேன். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.”
தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் 10,000 ரிங்கிட் ஜாமீனில் அகமட் விடுவிக்கப்பட்டார்.
அகமட் அன்றாடம் இடைவிடாமல் இரண்டு முறை 8 மணி நேரம் 10 மணி நேரம் வரையில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பினாங்கைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர் கூறினர்.
அகமட்டின் சொந்த வாழ்க்கை, அவரது குடும்பம், நண்பர்கள் பற்றி முதலில் விசாரணையில் கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் கற்பனையான பல ஊகங்கள் பற்றி கேள்வி எழுப்பபட்டது.
ஜோகூர் ஆட்சியாளர் மீது தாம் கொண்டுள்ளதாகக் கூறப்படும் சினத்துக்கு என்ன காரணம் என்றும் போலீசார் அவரிடம் வினவினர். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறவும் போலீசார் முயன்றனர் என்றும் அவர் கூறிக் கொண்டார்.
“நான் அவர்களிடம் ‘எதற்காக ஆத்திரப்பட வேண்டும்’ என கேட்டேன். நான் அவர்களிடம் எதுவும் சொல்லப் போவதில்லை எனத் தெரிந்ததும் அவர்கள் மற்ற விஷயங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பினர்,” என்றார் அவர்.
“அவர்கள் என்னுடைய வங்கிக் கணக்கு எண், எனக்கு அந்நிய வளங்களிலிருந்து பணம் கிடைக்கிறதா, அரபு நாடுகளுக்கு நான் சென்றுள்ளேனா என்று கூட அவர்கள் வினவினர்.”
“எனக்கு சில தரப்புக்கள் நிதி உதவி செய்வதாக அவர்கள் கருதினர். ஆனால் என்னிடம் பாஸ்போர்ட் கூடக் கிடையாது. வெளிநாடுகளைச் சேர்ந்த சில அந்நிய அரசு சாரா அமைப்புக்களுடன் தொடர்பு இருப்பதாக அவர்கள் எண்ணியிருக்க வேண்டும்,” என்றார் அவர்.
மன ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்
விசாரிக்கப்பட்ட எல்லா நேரங்களிலும் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அகமட் வலியுறுத்தினார்.
ஆனால் அதனைச் செவிமடுப்பதற்கு தயாராக இல்லை என்பது போலத் தோன்றியது என்றார் அவர்.
“தவறு செய்கின்றவர்கள் யாரும் தங்கள் தவறை ஒப்புக் கொள்வதில்லை” என்று மட்டும் அவர்கள் பதில் கூறினார்கள்.
முதலில் புக்கிட் அமானைச் சேர்ந்த மூன்று போலீஸ் அதிகாரிகளும் பின்னர் ஜோகூர் பாரு போலீஸ்காரர்களும் தம்மை விசாரித்தனர் என அகமட் சொன்னார்.
தாம் உடல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்றாலும் போலீசார் தம்மைக் கடுமையாக திட்டியதாகவும் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் துன்புறுத்தியதாக அகமட் தெரிவித்தார்.
ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஸாம்ரி பாக்கார், வியாழக்கிழமை நேற்று அகமட்டை ஏழு நாள் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்தார். தொடக்கத்தில் அவர் அரச குடும்பத்தை எந்த முகநூல் பதிவில் அவமானப்படுத்தியுள்ளார் என்பது தெரிவிக்கப்படாமலேயே தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
அகமட் இப்போது ஜோகூர் சுல்தானை அவமதித்ததாக இரண்டு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார். ‘Zul Yahya’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த முகநூல் கணக்கில் தம்போய் கம்போங் பாசிரில் உள்ள தேவான் தான் ஸ்ரீ முகமட் ரஹ்மாட் மண்டபத்தில் அக்டோபர் 21ம் தேதி பிற்பகல் 3 மணி வாக்கில் அவர் அந்த அவமானப்படுத்தும் பதிவைச் சேர்த்ததாக முதல் குற்றச்சாட்டு கூறியது.
அதே போன்ற குற்றத்தை அக்டோபர் 10ம் தேதி மாலை 6 மணி வாக்கில் ஜோகூர் போலீஸ் தலைமையக ஊடக மய்யத்தில் புரிந்ததாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.
அந்த விவரங்களை பெர்னாமா வெளியிட்டது.
1998ம் ஆண்டுக்கான தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233(1)(ஏ)ன் கீழ் அந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கான தண்டனை அதே சட்டத்தின் பிரிவு 233 (3)ல் குறிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட்டுக்கு மேற்போகாத அபராதம் அல்லது ஒராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அவர் அதே குற்றத்தைத் தொடர்ந்து புரிந்தால் ஒவ்வொரு நாளைக்கும் ஆயிரம் ரிங்கிட் அபராதம் கூடுதலாக விதிக்கப்படலாம்.
தமக்கு எதிரான வழக்கு மீண்டும் தாக்கல் செய்யப்படுவதற்காக அகமட் நவம்பர் 28ம் தேதி மீண்டும் ஜோகூர் பாருவுக்குச் செல்ல வேண்டும்.