ஏழ்மையில் உள்ள இந்தியர்களுடைய துயரங்களைத் துடைக்க ஐந்து ஆண்டு கால பெருந்திட்டத்தை ஹிண்ட்ராப் வெளியிடும்

ஏழ்மையில் வாடும் இந்தியர்களுடைய இன்னல்களைப் போக்குவதற்கு ஹிண்டராப் ஐந்து ஆண்டு கால பெருந்திட்டத்தை வெளியிடும் என அதன் தலைவர் பி வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

“2007ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மாபெரும் ஹிண்ட்ராப் பேரணியின் ஐந்தாம் ஆண்டு நிறைவை ஒட்டி வரும் நவம்பர் 25ம் தேதி தேசிய மேம்பாட்டு நீரோட்டத்தில் ஏழை இந்தியர்களை இணைப்பதற்கான ஐந்து ஆண்டு காலப் பெருந்திட்டத்தை நாங்கள் வெளியிடுவோம்,” என அவர் இன்று பிரிக்பீல்ட்ஸில் நிருபர்களிடம் கூறினார்.

அந்தப் பெருந்திட்டம் 2007ம் ஆண்டு ஹிண்ட்ராப் வழங்கிய 18 அம்ச கோரிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட குறுகிய காலத் திட்டம் என அவர் மேலும் சொன்னார்.

அந்தத் திட்டத்தின் விவரங்களை வேதமூர்த்தி வெளியிட மறுத்து விட்டார் என்றாலும் இந்த நாட்டில் நாடற்றவர்களாக இருக்கும் 350,000 இந்தியர்களுடைய நிலைக்கான தீர்வும் அதில் அடங்கும் எனச் சொன்னார்.

இந்த நாட்டில் உள்ள நாடற்ற இந்தியர்கள் நீல நிற அடையாளக் கார்டுகளை பெறுப்வதற்கு குடும்பப் பின்னணி மீதான சத்தியப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அரசாங்கத்தை அந்தப் பெருந்திட்டம் கேட்டுக் கொள்ளும்.

நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளை பெருந்திட்டம் வழங்குவதாக அப்போது உடனிருந்த ஹிண்ட்ராப் தேசிய  ஆலோசகர் என் கணேசன் தெரிவித்தார்.

“நாடற்ற நிலை நிர்வாக நுட்பப் பிரச்னை அல்ல அரசியல் பிரச்னை என நாங்கள் கருதுகிறோம். அரசியல் உறுதி இருந்தால் அதற்கு நிரந்தரமான முழுமையான தீர்வு காண இயலும்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

TAGS: