பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திப்பதற்கு ஹிண்ட்ராப் முன் நிபந்தனைகளை விதித்துள்ளது குறித்து இந்த நாட்டில் மிகப் பெரிய இந்தியர் அரசியல் கட்சியான மஇகா ஏமாற்றமடைந்துள்ளது.
“பிரதமரைச் சந்திப்பதற்கு முன் நிபந்தனை விதிப்பது நியாயமற்றதாகும். ஏனெனில் அவரைச் சந்திக்க விரும்பியது ஹிண்ட்ராப் ஆகும். அது இப்போது முன் நிபந்தனைகளை விதிக்கிறது,” என மஇகா தலைமைச் செயலாளர் எஸ் முருகேசன் இன்று தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
நஜிப்பை தான் சந்திப்பதற்கு முன்னதாக ஹிண்ட்ராப் மீதான தடையை அரசாங்கம் நீக்க வேண்டும் என இன்று காலை வெளியிடப்பட்ட ஹிண்ட்ராப் அதிகாரத்துவ அறிக்கை தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.
“நீங்கள் முன் கூட்டியே நிபந்தனைகளை விதித்தால் அப்புறம் ஏன் சந்திக்க வேண்டும் ?” என அவர் சொன்னார்.
ஏழை இந்தியர்களுடைய அவலத்தைப் போக்குவதற்கு மஇகா தவறி விட்டதால் ஹிண்ட்ராப்புடன் ஆலோசனை நடத்த நஜிப் முயற்சி செய்கிறாரா என வினவப்பட்ட போது முருகேசன் அதனை நிராகரித்ததுடன் பக்காத்தான் ராக்யாட்டைச் சுட்டிக் காட்டினார்.
“பிரதமருடன் பேசுவதற்கு அவர்கள் விரும்பியதே பக்காத்தான் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதைக் காட்டுகிறது.”
“பிரதமர் ஹிண்ட்ராப்பை சந்திக்க விரும்பவில்லை என்றால் சமூகத்தின் ஒரு பகுதிக்கு பிரதமர் செவி சாய்க்க விரும்பவில்லை என அவர்கள் சொல்வார்கள்,” என்றார் முருகேசன்.
‘மஇகா இன்னும் இந்தியர்களைப் பிரதிநிதிக்கிறது’
மஇகா இன்னும் இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கிறது என்றும் ஹிண்டரப்புக்கு நீட்டியுள்ள நட்புக்கரம் அரவணைத்துச் செல்லும் பிரதமருடைய அணுகுமுறை என்றும் முருகேசன் வலியுறுத்தினார்.
2007ம் ஆண்டு ஹிண்ட்ராப் நடத்திய பேரணியும் அது வழங்கிய ஆதரவும் எதிர்க்கட்சிகள் ஐந்து மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு உதவின. பிஎன் எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்தது.
ஆனால் 2008ம் தேர்தலுக்குப் பின்னர் ஹிண்ட்ராப்புக்கும் பக்காத்தானுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அரசாங்கத்தையும் எதிர்த்தரப்பையும் சந்திக்க தான் தயாராக இருப்பதாக ஹிண்ட்ராப் திறந்த வேண்டுகோளை விடுத்தது.
அந்த இயக்கம் ஏற்கனவே இரண்டு முறை பக்காத்தானைச் சந்தித்து விட்டது. அரசாங்கமும் ஹிண்ட்ராப்பை சந்திக்க விரும்புவதாக கடந்த புதன்கிழமை பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் அறிவித்தார்.