தேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் உள்ள (2013-2025) குறைபாடுகளை விளக்கி டோங் ஜொங் எனப்படும் மலேசிய ஐக்கிய சீனப் பள்ளிக்கூட குழுக்கள் சங்கம் கையேடு ஒன்றை விநியோகம் செய்துள்ளது.
அந்த பெருந்திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அந்தச் சீனக் கல்விப் போராட்ட அமைப்பு நவம்பர் 25ம் ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு முன்னதாக அந்தக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
‘அனைத்து மலேசியர்களுக்கும் டோங் ஜோங்-கின் திறந்த மடல்’ என்னும் தலைப்பைக் கொண்ட கடிதமும் 24 பக்க கையேட்டுடன் மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
அது தவிர பிரச்னை மீது 10 அம்ச கேள்வி-பதில் பாணியில் விளக்கமும் மலேசியச் சீன அமைப்புக்களின் ஆதரவுக் கடிதங்களும் தேசியக் கல்விப் பெருந்திட்டத்தை எதிர்க்கும் செய்தி நறுக்குகளும் தலையங்கங்களும் எதிர்ப்புப் பேரணி நடத்தப்படும் இடத்துக்கு செல்வதற்கான வரைபடமும் பிரச்சார சுவரொட்டிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்தப் பேரணியில் பங்கு கொண்டு ஆதரவு அளிக்குமாறு அனைத்து இன வம்சாவளி மக்களுக்கும் டோங் ஜோங் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மலாய் மொழியைப் போதனா மொழியாகக் கொண்ட ஒரே நீரோட்டக் கல்வி முறையை அறிமுகம் செய்வதை வலியுறுத்தும் 1956ம் ஆண்டு ரசாக் அறிக்கையின் ‘இறுதி இலட்சியத்தை’ அமலாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அண்மைய முயற்சி தேசியக் கல்விப் பெருந்திட்டம் என்றும் அந்தக் கையேடு குறிப்பிடுகின்றது.
“2009ம் ஆண்டுக்கு முன்னதாக இரண்டு கல்விப் பெருந்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது சீன, தமிழ் தொடக்கப்பள்ளிகள் முதலாம் ஆண்டு தொடக்கம் மூன்றாம் ஆண்டு வரை மலாய் மொழியை போதனா மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்தது.”
“அந்தத் திட்டம் மொழி வகுப்புக்கள் தொடக்கம் சீன, தமிழ்ப் பள்ளிகளின் அடையாளத்தையே மாற்றியிருக்கும். அதனால் பல்வேறு அமைப்புக்கள் குறிப்பாக சீனக் கல்வி போராட்ட அமைப்புக்கள், அரசு சாரா அமைப்புக்கள் ஆகியவை ஆட்சேபித்தன. இறுதியில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.”
“இப்போது கல்வி அமைச்சு தேசியக் கல்விப் பெருந்திட்டத்தைப் பயன்படுத்தி ‘இறுதி இலட்சியத்தை’ அடைவதற்காக சீன, தமிழ்ப் பள்ளிகளை மாற்ற விரும்புகிறது,” என அந்தக் கையேடு குறிப்பிடுகிறது.
டோங் ஜோங் கோரிக்கைகள் பேராசையால் விளைந்தவை என்றும் வெறுப்பைத் தூண்டுகின்றன என்றும் பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் விடுத்த அறிக்கையையும் அந்த கையேடு மறுத்தது.