நசாருதின்: நுருல் சொல்வது தவறு, முஸ்லிம்களுக்குத் தேர்வு இல்லை

‘சமயத்தில் கட்டாயம் இல்லை’ என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள அறிக்கை மலாய் முஸ்லிம்களுக்கு சமயச் சுதந்தரத்தை வழங்குவதற்கு ஒப்பாகும் என முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா கூறுகிறார்.

அந்த வாசகம் முஸ்லிம் அல்லாதவருக்கு மட்டுமே பொருந்தும் என அவர் சொன்னார்.

“சமயம், ஷாரியா, தார்மீகம் ஆகிய விஷயங்களை அல்லாஹ் முடிவு செய்யும் போது நமக்கு (முஸ்லிம்கள்) தேர்வு செய்யும் உரிமை இல்லை.”

“திருக்குர்-ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதை செவிமடுத்து அதற்குக் கீழ்ப்படிவதே நமது உரிமையாகும்,” என அவர் உத்துசான் மலேசியாவின் ஞாயிறு பதிப்பில் வெளியான தமது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆகவே அது மலாய் முஸ்லிம்களுக்கு சமயச் சுதந்திரத்தை கொடுப்பதற்கு ஒப்பானது என்பதை நுருல் இப்போது மறுப்பாரானால் தமது வாதத்திற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றார் நசாருதின்.

இல்லை என்றால் அந்த பிகேஆர் உதவித் தலைவர் தமது அறிக்கையை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

நுருல் இஸ்ஸாவைத் தற்காத்துப் பேசியுள்ள மற்ற பாஸ் தலைவர்கள் பற்றிக் குறிப்பிட்ட நசாருதின்  அவர்களுக்கு இஸ்லாமியக் கல்விப் பின்னணி இல்லை என்றார்.

நுருலின் கருத்துக்கள் தொடர்பில் பாஸ் உறுப்பினர்கள் கவலை அடைந்துள்ளதால் கட்சித் தலைமைத்துவம் அவரை கண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினர்.

“தலைமைத்துவம் அறிக்கை வெளியிடுவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.”

உத்துசான் மலேசியா நம்பக்கூடிய பத்திரிக்கை இல்லை என்பதால் அந்த விவகாரம் மீது கருத்துக் கூற பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் மறுத்து விட்டார்.

‘நுருல்: சமயத்தைத் தெரிவு செய்வதில் கட்டாயம் கூடாது’ என்னும் தலைப்பில் மலேசியாகினி அக்டோபர் 3ம் தேதி நுருலின் அறிக்கையை செய்தியாக வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து ‘மலாய்க்காரர்கள் சமயத்தை தேர்வு செய்வதற்கு சுதந்திரம் உண்டு ?’ என்னும் தலைப்பில் லெம்பா பந்தாய் எம்பி-யின் அறிக்கையை குறை கூறி உத்துசான் மலேசியா செய்திகளை வெளியிட்டது.

உத்துசான் தமது அறிக்கைகளை ‘திரித்து’ விட்டதாக பின்னர் நுருல் புகார் செய்தார்.

 

TAGS: