நோங் சிக்: வாக்குகளை கவருவதே நுருல் அறிக்கையின் நோக்கம்

“சுபாங் ஜெயாவில் நிகழ்ந்த கருத்தரங்கு ஒன்றில் சமயச் சுதந்திரத்தை ஆதரித்து நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள அறிக்கை வாக்குகளைக் கவரும் நோக்கத்தைக் கொண்டது. மக்களுக்கு அவர் உண்மையாகச் சேவை செய்யவில்லை என்பதை அது காட்டுகின்றது.”

இவ்வாறு கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் கூறுகிறார்.

‘இஸ்லாமிய நாடு: எந்த பதிப்பு; யாருடைய பொறுப்பு’ என்னும் தலைப்பில் நடைபெற்ற அந்தக் கருத்தரங்கில் பங்கேற்பாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நுருல் அதனைச் சொன்னதாகவும் ராஜா நோங் சின் சொன்னார்.

“நுருல் இஸ்ஸா சமயச் சுதந்திரத்தை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் பல்வேறு தரப்புக்கள் தெரிவித்த ஆட்சேபத்தையும் காட்டிய ஆத்திரத்தையும் உணர்ந்த பின்னர் அவர் ஊடகங்களைச் சாடுகிறார்,” என லெம்பா பந்தாய் ‘Karnival 1Malaysia For Youth (1M4U) கொண்டாட்டங்களை தொடக்கி வைத்த போது நிருபர்களிடம் கூறினார்.

குறிப்பிட்ட சமயத்தை தெரிவு செய்யுமாறு மக்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அது மலாய்க்காரரகளுக்கும் பொருந்தும் என்றும் நுருல் சொன்னதாக எதிர்த்தரப்பு ஆதரவு செய்தி இணையத் தளம் ஒன்று நவம்பர் 3ம் தேதி செய்தி வெளியிட்டது.

“நீங்கள் என்னைக் கேட்டால் சமயத்தில் கட்டாயம் இல்லை. வருந்துகிறேன் அது (சமயச் சுதந்திரம்) மலாய்க்காரர் அல்லாதாருக்கு மட்டும் பொருந்தும் என ஒருவர் எப்படிச் சொல்ல முடியும். அது சமமாக அமலாக்கப்பட வேண்டும்,” என அந்த பிகேஆர் உதவித் தலைவர் கூறினார்.

பேரணிகளை நடத்தி வெற்று வாக்குறுதிகளை வழங்கும் எதிர்க்கட்சிகளைப் போல் அல்லாது பிஎன் மக்களுக்குத் தான் அளித்த வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றி வந்துள்ளது என நோங் சிக் சொன்னார்.

13வது பொதுத் தேர்தல் பற்றிக் குறிப்பிட்ட அவர் அது சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் நிகழும் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்தார். என்றாலும் இறுதி முடிவு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சார்ந்தது என்றார் அவர்.

“அது என்னுடைய ஆரூடம் தான். ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு பிஎன் தேர்தல் எந்திரம் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும்,” என லெம்பா பந்தாய் அம்னோ தொகுதித்  தலைவருமான நோங் சிக் கூறினார்.

பெர்னாமா

 

TAGS: