சிலாங்கூரில் ஏஇஎஸ் கேமிராக்களை அகற்ற 14 நாள் காலக் கெடு

சிலாங்கூர் மாநிலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு தானியங்கி அமலாக்க முறை (ஏஇஎஸ்) கேமிராக்களை அகற்றுவதற்கு மாநில அரசாங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு இன்று தொடக்கம் 14 நால் காலக் கெடுவை மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது.

அமைச்சு அதனைச் செய்யத் தவறினால் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தின் ‘துணையுடன்’ அந்த கேமிராக்கள் அகற்றப்படும் என மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ சொன்னதாக நன்யாங் சியாங் பாவ் அறிவித்துள்ளது.

காஜாங்கில் கூட்டரசு அரசாங்கம் பொருத்தியுள்ள இரண்டு கேமிராக்களுக்கு சட்டத்தின் கீழ் தேவைப்படும் ஊராட்சி மன்ற அனுமதி பெறப்படவில்லை என அவர் நேற்று குறிப்பிட்டதாக அந்தச் செய்தி குறிப்பிட்டது.

வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் சோர் சீ ஹியூங்-கும் போக்குவரத்து அமைச்சர் கோங் சோ ஹா-வும் 1976ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்றச் சட்டத்தை பார்க்க வேண்டும் என லியூ சொன்னார்.

“ஏஇஎஸ் முறை பல பலவீனங்களைக் கொண்டுள்ளதால் சிலாங்கூரில் அதனை  நடைமுறைப்படுத்துவதற்கும்  மாநில அரசாங்கம் தடை விதித்துள்ளது,” என்றார் அவர்.

அந்த ஏஇஎஸ் முறையின் பயன்களை நியாயப்படுத்துவதற்கு சாலைப் போக்குவரத்துத் துறை தவறி விட்டதால் அதற்கு எதிர்ப்ப்புத் தெரிவித்த முதல் மாநிலம் சிலாங்கூர் ஆகும்.