“அப்துல்லாவின் அறிக்கையை விசாரிப்பதற்கு நமது மிகத் திறமையான போலீஸ் படை எப்போது உதவப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள நான் மிக ஆவலாக இருக்கிறேன்”
வலைப்பதிவுகள்: முஸ்லிம்கள் சமயத்தை விட்டு வெளியேறலாம் என பாக் லா சொன்னார்
பார்வையாளன்: “முஸ்லிம்கள் சமயத்தை விட்டு விலகலாம். ஆனால் முதலில் அந்த விஷயத்தை மாநில சமய அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டும்” என 2007ம் ஆண்டு முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி சொன்னதாக சானல் நியூஸ் ஏசியா தகவல் வெளியிட்டுள்ளது.
அதே 2007ம் ஆண்டு இன்னொரு முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் முகமட் இவ்வாறு மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்: “நீங்கள் இஸ்லாத்தைக் கைவிடுவதற்குத் தயாராக இருந்தால் மலாய் என்பதற்கான விளக்கத்துடன் சம்பந்தப்பட்ட உரிமைகளையும் இழப்பதற்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.”
இந்த மாதத் தொடக்கத்தில் “சமயத்தில் கட்டாயம் இல்லை. டாக்டர் அகமட் பாரூக் மூசா கூட அந்த திருக்குர் ஆன் வாசகத்தை மேற்கோள் காட்டியுள்ளார். ‘வருந்துகிறேன், அது மலாய்க்காரர் அல்லாதாருக்கு மட்டும் பொருந்தும் ! எல்லாருக்கும் அது சமமாகப் பொருந்தும் என ஒருவர் எப்படிச் சொல்ல முடியும்.”
மலாய்க்காரர்கள் சமயத்தை விட்டு வெளியேற இயலும் என்பதையே அந்த மூவரும் உணர்த்துகின்றனர்.
நுருலுடைய கருத்துக்களை விசாரிப்பதற்கு ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறைக்கு போலீசார் உதவுவதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் சொன்னதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
அதே போன்று இப்போது அப்துல்லாவையும் மகாதீரையும் ஜயிஸும் போலீஸும் விசாரிக்கப் போகின்றனவா அல்லது அம்னோ அடிவருடிகளான எங்களுடைய முக்கியமான பணி எதிர்க்கட்சிகளை மருட்டுவது தான் என்பதை மீண்டும் மெய்பித்து நுருலை மட்டும் விசாரிக்கப் போகின்றனவா ?
ஜேஎஸ்டோம்: ஒருவர் மதம் மாறும் போது எப்படி இனத்தை விட்டு ‘போக’ முடியும் ? அந்த விளக்கத்தில்அல்லது புரிந்துணர்வில் ஏதோ கோளாறு உள்ளது.
‘வெள்ளை’ மனிதர்களுடைய சமயமான கிறிஸ்துவத்திற்கு மாறியதால் இந்தியர்கள் வெள்ளையர்களாகி விட முடியாது. அவர்கள் இன்னும் இந்தியர்களே.
அபாசிர்: இங்கு ஏதோ திட்டம் தீட்டப்பட்டு அமலாக்கப்படுவதாகத் தோன்றுகிறது. முதலில் பத்துமலை ‘கொண்டோ’ அனுமதிக்கு மஇகா பக்காத்தானைச் சாடியது. அதற்குப் பின்னர் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
அடுத்து அம்னோ சமய நம்பிக்கையற்றவர்களுக்கு நுருல் ஊக்கமூட்டுவதாக தாக்கியது. பின்னர் முஸ்லிம்களுக்கு கிடைக்கக் கூடிய சுதந்திரம் குறித்து முன்னாள் அம்னோ பிரதமர் ஒருவர் சொன்ன கருத்து அம்பலத்துக்கு வருகின்றது.
ஸ்னுப்பி ஜுனியர்: அது தான் பாக் லா-வின் புகழ் பெற்ற இஸ்லாம் ஹாதாரி. அதன் விளக்கம் மிகவும் தாராளமயமாக இருந்தது. அதனால் அதனை கற்றுக் கொள்ள புருணை ஒரு குழுவையே இங்கு அனுப்பியது.
ஆனால் புருணை அதனை மிகவும் முழுமையான வடிவத்தில் பின்பற்றத் தொடங்கியுள்ளது. ஷாரியா அமலாக்கத்துக்கு அண்மையில் புருணை சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார். அது இரண்டு வகையான குற்றவியல் சட்டங்களை ஒன்றிணைத்துள்ளது புதுமையான ஒரு விஷயமாகும். அது மலேசியாவுக்கு முன் உதாரணமாகவும் திகழலாம்.
அச்சத்தை பரப்புகின்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள். டுபாயைப் பாருங்கள். அது ஷாரியாவைப் பின்பற்றும் இஸ்லாமிய நாடு. அந்த நாடு அதனை பகுத்தறிவுடன் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதனால் அதன் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படவில்லை. சுற்றுப் பயணிகளும் அச்சமடையவில்லை. தாங்கள் மலேசியாவின் தலிபான்களாகப் போவதில்லை என பாஸ் வாக்காளர்களுக்கு உறுதி அளிக்குமானால் அதற்கு நிச்சயம் வாக்குகள் கிடைக்கும்.
ரஹ்மான்: மலேசியாகினி முஸ்லிம்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை தூண்டி விடுவதாகத் தோன்றுகிறது.
வீரா: ரஹ்மான் உத்துசான் மலேசியா கதை திரிக்கும் போது மலேசியாகினி உண்மையைச் சொல்கிறது. பொய்யைக் காட்டிலும் உண்மையே அதிக வலியைக் கொடுக்கும்.
ராக்யாட் மலேசியா: நாம் தேசியப் பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக நீதி போன்ற அழுத்தும் பல விஷயங்களை விவாதிக்க வேண்டும். பிஎன் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது ?
2zzzxxx: அப்துல்லாவின் அறிக்கையை விசாரிப்பதற்கு நமது மிகத் திறமையான போலீஸ் படை எப்போதுஉதவப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள நான் மிக ஆவலாக இருக்கிறேன்.
டிசி சான்: பாக் லா பற்றி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஏமாற்றம் அடைந்துள்ளார் என அவருடையதனிப்பட்ட செயலாளர் இப்போது அறிவிப்பாரா ?