கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதில் பாஸ் கட்சி தீவிரமாக இருந்தால் அது அம்னோவுடன் பேச வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்கு தடையாக இருப்பதாக அம்னோவை பாஸ் தொடர்ந்து குற்றம் சாட்டுவது நியாயமல்ல என்றும் கைரி சொன்னார். ஏனெனில் அந்த இஸ்லாமியக் கட்சி ஆளும் கட்சியுடன் சர்ச்சைக்குரிய அந்த விஷயம் குறித்துப் பேசுவதற்கு தீவிரமாக முயற்சி செய்யவே இல்லை என்றார் அவர்.
1990ம் ஆண்டுகளின் மத்தியில் அந்த விவகாரம் தலையெடுத்தது முதல் பாஸ், அம்னோவை அணுகுவதற்கு முயற்சி செய்யவில்லை. அது இஸ்லாமிய விவகாரம் என்பதால் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்கு உதவியாக கூட்டரசு அரசியலமைப்பை திருத்த எங்கள் ஒத்துழைப்பை பாஸ் நாடவில்லை.”
“ஆகவே பாஸ் தீவிரமாக இல்லாததால் பிஎன்-னையோ அல்லது அம்னோவையோ குற்றம் சாட்டுவது நியாயமில்லை,” என்றார் கைரி.
பிஎன் இளைஞர் தலைவர் என்னும் முறையில் தேசிய மசீச இளைஞர் பொதுப் பேரவையில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.
ஹுடுட் அமலாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டிற்கு எழுதிய கடிதத்தை பாஸ் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கைரி கேட்டுக் கொண்டார். ஏனெனில் இப்போது அம்னோவுக்கு புதிய தலைவர் இருக்கிறார்.
“ஆகவே அவர்கள் தீவிரமாக இருந்தால் பிரதமரை வந்து பாருங்கள் அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் கலந்துரையாடலை மீண்டும் தொடங்குங்கள்.”
பாஸ் டிஏபி-யை மாற்றி விட்டது
இதனிடையே ஹுடுட் மீதான நடப்புப் பிரச்னைக்கு பாஸ் கட்சியின் கூட்டணித் தோழரான டிஏபி மீது மசீச துணைத் தலைவர் லியாவ் தியோங் லாயும் பழி போட்டனர்.
“பாஸ் கட்சியைத் தான் மாற்ற இயலும் என டிஏபி பொது மக்களை நம்ப வைக்க முயன்றது. ஆனால் இப்போது பாஸ் கட்சி டிஏபி-யை மாற்றி விட்டது. அது இப்போது ஹுடுட் விஷயம் மீது மௌனமாக இருக்கிறது,” என அவர்கள் தெரிவித்தனர்.
ஹுடுட் சட்ட அமலாக்கத்தை மசீச-வும் டிஏபி-யும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அந்தச் சட்டம் அமலாக்கப்பட்டால் பிஎன் -னிலிருந்து வெளியேறப் போவதாக மசீச தலைவர் சுவா சொய் லெக்-கும் பக்காத்தான் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக டிஏபி தலைவர்களும் மருட்டியிருந்தனர்.