சிஎம்: டிஏபி தலைவரின் முடிவை வைத்தே வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்

முதலமைச்சர் லிம் குவான் எங், பெங்காலான் கோட்டா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் லாவ் கெங் ஈ-ஐ மீண்டும் வேட்பாளராக நிறுத்துவதா, இல்லையா என்பதை முடிவு செய்யுமுன்னர் லாவின் அடைவுநிலை குறித்து மாநில டிஏபி தலைவர் சொள கொன் இயோ-வின் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறார்.

எனவே, லாவ் மீண்டும் போட்டியிட விரும்பினால், 2008-இல் அவரை வேட்பாளராக தெரிவுசெய்த சொள-விடம் நல்ல பேர் வாங்க கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று லிம் குறிப்பிட்டார்.

“சொள-வின் பரிந்துரையைத்தான் நான் கேட்பேன்.

“சொள 13 ஆண்டுகளாக தஞ்சோங் எம்பி-ஆக இருக்கிறார். அத்தொகுதி பற்றி அவரே நன்கறிவார். லாவ் உள்பட அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் அடைவுநிலை பற்றியும் அவர் தெரிந்து வைத்திருப்பார்”,என லிம் கூறினார்.

இரண்டு நாள்களுக்குமுன் நடந்த பேரணி ஒன்றில் லாவுக்கு எதிர்பார்த்த அளவுக்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் அடுத்த பொதுத் தேர்தலில் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் என்று அரசல் புரசலாக பேசப்படுகிறது.அது பற்றி கேட்கப்பட்டதற்குத்தான் லிம் இவ்வாறு கருத்துரைத்தார்.

பேரணிக்கு 30 பேரே வந்ததை வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்றாரவர்.

“சொள தஞ்சோங் தொகுதி தலைவர் என்பதால் அங்குள்ள நிலவரத்தை அவர் நன்கு ஆராய்ந்து வைத்திருப்பார்.

“எனவே, சொள சொல்வதைக் கேட்கவே விரும்புகிறேன். சில நிகழ்வுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் புதிய நடைமுறையை உருவாக்க விரும்பவில்லை.  களப் பணி எப்படிப்பட்டது என்பதுதான் முக்கியம்”, என்று லிம் கூறினார்.

 

TAGS: