பாஸ் கட்சியின் இன்றைய ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வருணிக்கப்பட்ட ‘பிசாசுக் கட்சி’ பற்றிய விளக்கத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மட்டுமே தர முடியும் என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறியுள்ளார்.
“மகாதீரைப் போய்க் கேளுங்கள். அதனைச் சொன்னது மகாதீர், அந்த சொல்லை உருவாகியவர் அவர்,” என கோத்தா பாருவில் கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் தொடக்கி வைக்கப்பட்ட பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
பிசாசுகள் ஆதிக்கம் செலுத்தும் கட்சியில் நீதி கிடைக்காது என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளது யாரைக் குறிப்பிடுகிறது என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு முஸ்தாபா பதில் அளித்தார்.
“அந்தப் பிசாசுக் கட்சியை பிசாசு கட்டுப்படுத்துகின்றது- அந்தப் பிசாசு மக்களுக்குத் தெரியும்- அனைத்து மக்களுக்கு நியாயமான சமூக நல நீதியை வழங்கும் ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை,” என அப்துல் ஹாடி பாஸ் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த போது கூறினார்.
அவர் ஆளும் கூட்டணியை அவ்வாறு குறிப்பிட்டாரா என நிருபர்கள் பின்னஎ அப்துல் ஹாடியிடம் வினவிய போது,” நான் எந்தப் பெயரையும் சொல்லவில்லை,” எனப் பதில் அளித்தார்.
அவர் மேலும் சொன்னார்: “Siapa yang makan lada, dialah yang rasa pedas”- (ஒரு வருணனை தங்களுக்கு பொருந்தும் என ஒரு நபர் உணர்ந்தால் அது அவருக்குத் தெரியும்) என்னும் மலாய் முதுமொழியாகும்.”
டாக்டர் மகாதீர் பக்காத்தான் ராக்யாட்டைக் குறிக்கும் வகையில் ‘தங்களுக்கு தெரியாத தேவதைக்கு’ வாக்களித்து நாட்டின் எதிர்காலத்தைப் பணயம் வைப்பதை விட ‘தங்களுக்குத் தெரிந்த பிசாசை’ மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என தமது வலைப்பதிவு ஒன்றில் கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்தக் கருத்துக்கள் 22 ஆண்டுகளுக்கு மேல் மகாதீர் வழி நடத்திய ஆளும் கூட்டணியை தாக்குவதற்கு இப்போது அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
‘திருப்பு முனையில் ஹாராக்கா’
கட்சி ஏடான ஹாராக்கா குறித்து இளைஞர், உலாமா பிரிவுக் கூட்டங்களில் கடுமையாக விமர்சனம்செய்யப்பட்டது பற்றியும் ஹாடி தமது உரையில் குறிப்பிட்டார்.
“குறைவான வளங்களுடன் இயங்கி வரும் ஹாராக்கா பற்றி நான் மனநிறைவு அடைந்துள்ளேன்,” என்றார் அவர்.
“கட்சி உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் சேவை செய்ய வேண்டிய திருப்பு முனையில் ஹாராக்கா தற்போது இருப்பதை நாம் உணர வேண்டும், அது தான் இப்போது உள்ள இக்கட்டான சூழ்நிலை,” என்றார் ஹாடி.
ஹாராக்கா ஆசிரியர் குழு சொந்த பாஸ் கட்சியைக் காட்டிலும் பக்காத்தான் ராக்யாட் செய்திகளுக்கு அதிக இடம் கொடுப்பதாக அந்த இரண்டு பிரிவுகளும் நேற்று குற்றம் சாட்டியிருந்தன. அதனால் ஆசிரியர் குழு திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும் அவை கேட்டுக் கொண்டன.
எல்லாக் கருத்துக்களையும் யோசனைகளையும் கட்சி பரிசீலிக்கும் என்றும் அப்துல் ஹாடி உறுதி அளித்தார்.
தேர்தல் வேட்பாளர்கள் பற்றிக் குறிப்பிட்ட மாராங் எம்பி-யுமான அவர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.