அரசாங்க ஆதரவு நாளேடுகளான உத்துசான் மலேசியாவும் என்எஸ்டி என்ற நியூ ஸ்ட்யிரட்ஸ் டைம்ஸும் தம்மைப் பற்றி தவறான ‘விஷமத்தனமான, வெறுப்பைத் தருகின்ற’ கட்டுரைகளை வெளியிட்டதாகக் கூறி ஆஸ்திரேலிய செனட்டர் நிக்கோலஸ் செனபோன் போலீசில் புகார் செய்துள்ளார்.
அந்தப் புகார் இன்று ஜாலான் டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்தப் புகார் தேர்தல் சீர்திருத்தங்கள் மீது நடைபெற்ற மாபெரும் பேரணிக்குப் பின்னர் மே முதல் தேதி “பெர்சே 3.0ஐ இஸ்லாம் எதிர்ப்பு செனட்டர் பார்வையிட்டார்” என்ற தலைப்பில் உத்துசான் வெளியிட்டிருந்த கட்டுரை சம்பந்தப்பட்டதாகும்.
“அந்த விவகாரம் மிகவும் கடுமையானது என நான் கருதுகிறேன். ஏனெனில் இஸ்லாம் பற்றி நான் சொன்னதாக கூறப்பட்டுள்ள கருத்துக்கள் வன்முறையில் இறங்குமாறு மற்றவர்களைத் தூண்டக் கூடும். அவை என்னுடைய கருத்துக்கள் அல்ல…”
“அவை மிகவும் காயப்படுத்துவதாக நான் கருதுகிறேன். நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் என குற்றம் சாட்டுவது மிகவும் விஷமத்தனமானது.”
“நான் அவதூறான அந்தச் சொற்களை மீண்டும் சொல்ல விரும்பவில்லை. காரணம் அவை எனக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்பை அளித்துள்ளன,” என்று போலீஸ் நிலையத்துக்கு வெளியில் அவர் சொன்னார்.
செனபோன் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இஸ்லாத்துக்கு எதிராக பேசியுள்ளதாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவும் அதனை மீண்டும் வெளியிட்ட நியூ ஸ்ட்யிரட்ஸ் டைம்ஸும் அந்தக் கட்டுரையில் கூறிக் கொண்டன.
ஆனால் அந்த செனட்டர் தமது உரையில் இஸ்லாம் பற்றிப் பேசவில்லை என்றும் Scientology பற்றியே பேசினார் என்பது அவருடைய உரையின் எழுத்துப் படிவங்கள் உறுதி செய்த பின்னர் அந்த நாளேடுகள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டன.
“மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப்பட்டதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இது அதற்கும் மேலானது.”
“சில வேளைகளில் மன்னிப்புக் கேட்பது மட்டும் போதாது. அந்த விவகாரத்தை மேலும் தொடருவதற்கு உங்களுக்கு உள்ள உரிமைகளை அது பறிக்கவில்லை.”
“நான் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: என்னைப் பற்றி சொன்ன விஷயங்கள் மிகவும் வெறுப்பைத் தருகின்றன, மிகவும் விஷமத்தனமானது, மிகவும் புண்படுத்தக் கூடியது. அது மலேசியக் குற்றவியல் சட்டத்தை மீறுமானால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”
அந்த நாளேடுகள் மன்னிப்புக் கேட்டதை அவர் நிராகரிக்கிறாரா என வினவப்பட்ட போது செனபோன் இவ்வாறு பதில் அளித்தார். “அது இதிலிருந்து நான் விலகிச் செல்ல முடியாது என நான் சொல்லும் வழியாகும். நான் என் பெயரை முழுமையாகத் தூய்மைப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.”
எந்த ஒரு போலீஸ் புகாருக்கும் 15 நாட்களுக்குள் போலீசார் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் எனச் சட்டம் கூறுவதால் அந்தக் காலக் கெடுவுக்குப் பின்னர் அடுத்த நடவடிக்கை பற்றி சிந்திக்கப் போவதாக செனபோனுடைய வழக்குரைஞர் அமீர் ஹம்சா அர்ஷாட் கூறினார்.
“நடவடிக்கை ஏதும் எடுக்கா விட்டால் நாங்கள் சட்டத்துறைத் தலைவருக்கு எழுதுவோம்,” என்றார் அவர்.
ஆஸ்திரேலியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நல்ல உறவுகள் நிலைத்திருக்கும் பொருட்டு அந்த விவகாரத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் அமீர் ஹம்சா கேட்டுக் கொண்டார்.