பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் இராணுவத் தலைவர் அஹ்மட் ஜபாரி அவர்கள் காசாவில் வைத்து இஸ்ரேலிய வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
காசாவுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்கள் 4 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்ட மிகவும் உயரிய ஹமாஸ் தலைவர் ஜபாரி ஆவார்.
அவரது சகா என்று கருதப்படும் இன்னுமொருவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
காசாவில் தெரு எங்கிலும் ஆத்திரமடைந்த ஆட்கள் இயந்திர துப்பாக்கிகள் மூலம் சுடும் சத்தத்தை கேட்கக் கூடியதாக இருந்ததாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மற்றுமொரு வன்செயல் அதிகரிப்புக்கு காரணமாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜபாரி கொல்லப்பட்டது, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் ஆகியவை உட்பட தீவிரவாதக் குழுக்களுக்கு எதிரான ஒரு எல்லைப் புற நடவடிக்கையின் ஆரம்பத்தை குறிக்கிறது என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்த வான் தாக்குதல் நரகத்தின் வாயிலை திறந்திருக்கிறது என்று ஹமாஸ் கூறியுள்ளது.