ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; பொதுத் தேர்தல் அறிவிப்பு

ஜப்பானின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருந்த நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடியும் முன்பாகவே அது கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் தேதி வெளியாகவில்லை.

இருந்தாலும் அடுத்த ஒரு மாதத்துக்குள் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ளத் தேர்தலில், முன்னாள் வலதுசாரி பிரதமர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் எனக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

கடந்த தேர்தலில் பல ஆண்டுகாலம் ஆட்சி செலுத்தி வந்த லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியை மக்கள் பதவியிலிருந்து அகற்றினர்.

ஆனால் அதையடுத்து ஆட்சிக்கு வந்த ஜப்பான் ஜனநாயகக் கட்சி பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என்று பார்க்கப்படுகிறது.

அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தற்போதையப் பிரதமர் யோஷிஹிகோ நோடா லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியின் தலைவர் ஷின்சோ அபேயை எதிர்கொள்கிறார்.

அபே தேசியவாதக் கொள்கைளை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்கிறார்.