ஹாடி பிரதமராக வேண்டும் என பாஸ் உலாமா பிரிவு விருப்பம்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பிரதமர் பதவிக்கு சிறந்த வேட்பாளர் எனக் கோத்தா பாருவில் 58வது பாஸ் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய தேவான் உலாமா என்றழைக்கப்படும் பழமைப் போக்குடைய பிரிவை பிரதிநிதித்த ஹைருண் நிஸாம் மாட் ஹுசேன் கூறியுள்ளார்.

“நமது தோக் குரு இல்லை என்றால் பிரதமராவதற்குச் சிறந்த நபர் யார் ?”

“நியாயமாக அப்துல் ஹாடி தலைவராக இருக்க வேண்டும். ஏனெனில் முஸ்லிம் நாடு ஒன்றை உருவாக்கும் போது அல்லாஹ்-வின் சட்டங்களை நன்கு அறிந்த ஒருவர் நமக்குத் தேவைப்படுகின்றார்,” என்றார் அவர்.

பாஸ் கட்சி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போது கட்சியின் டாக்வா (பிரச்சாரப் பணிகள்) பாதிக்கப்படும் என ஹைருண் அதற்கு முன்னர் கவலை தெரிவித்தார்.

“தொடக்கத்திலிருந்தே பாஸ் ஒரு டாக்வா இயக்கமாகும். டாக்வா-வுக்கு ஒரு வழி அரசியலாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது கருத்துக்கள், பக்காத்தான் ராக்யாட் ஆட்சியைப் பிடிக்குமானால் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமே பிரதமராக இருப்பார் என பிகேஆர் கட்சியும் டிஏபி-யும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கு மாறாக அமைந்துள்ளன.

ஹாடியின் பதில்

அந்த விஷயம் மீது நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த அப்துல் ஹாடி, அத்தகைய பதவிகளுக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆசைப்படக் கூடாது என்றார்.

“இஸ்லாமியக் கட்சி ஒன்றின் தலைவர் என்ற முறையில் அத்தகைய பதவிகளைக் கேட்கக் கூடாது என எனக்கு போதிக்கப்பட்டுள்ளது. அது பெரிய பொறுப்பு என்பதால் நாங்கள் அதனைக் கோரவில்லை. புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதில் மட்டுமே நாங்கள் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம்.”

“மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர், நமது மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய ஒருவர், மக்களுக்கு நீதியை நிலைநாட்டக் கூடிய ஒருவர் பிரதமராவதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“பக்காத்தான் அவரைப் பிரதமராக முன்மொழிந்தால் அவர் எப்படி நடந்து கொள்வார் என்றும் அப்துல் ஹாடியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,” நான் மக்களுடைய சேவகனாக இருப்பதையே விரும்புவேன்,” என்றார்.

அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை பக்காத்தான் கைப்பற்றுமானால் பிரதமராவதற்கு யார் மிகவும் தகுதியுள்ள வேட்பாளர் எனத் தொடர்ந்து அவரிடம் வினவப்பட்டது.

அதற்கு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி பதில் அளித்தார். முதலில் தேர்தலில் வெற்றி பெறுவது தான் முக்கியம் என அவர் சொன்னார்.

“வெற்றி பெறுகின்றவர்களே மிகவும் தகுதி உடையவர்கள். அவர்கள் வெற்றி பெறா விட்டால் அவர்கள் தகுதி பெற முடியாது,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

TAGS: