காசா மீதான இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் விரிவுபடுத்தும் : இஸ்ரேல் பிரதமர்

மத்திய கிழக்கின் காசாவில் ஹமாஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான தமது இராணுவ நடவடிக்கைகளை கணிசமான அளவில் விரிவுபடுத்த தான் தயாராக இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு கூறுகிறார்.

காசாவில் இருந்து இஸ்ரேலிய நிலப்பரப்பில் ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் ஆயுததாரிகள் தொடர்ந்து வீசிவரும் அதேவேளை, காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

காசாவுக்குள் மருத்துவ உதவிப் பொருட்களை கொண்டுசெல்லப்படுவதற்கு இஸ்ரேல் தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் ஐம்பதுக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பாதிக்கும் அதிகமானோர் பொதுமக்கள் என்றும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

இதற்கிடையில், காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல் தவிர்ப்பு ஒன்றை கொண்டுவரும் நோக்குடன் எகிப்து தலைநகர் கெய்ரோவில் முயற்சிகள் நடந்துவருகின்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்ரேலிய தூதுக்குழுவொன்று கெய்ரோ வந்திருக்கிறது. இப் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை.

இஸ்ரேல் வன்முறைகளை நிறுத்துவதாக உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கெய்ரோவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, காசாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட் குண்டுத் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்பதே தமது ஆணித்தரமான நிபந்தனை என்று முன்னதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்டோர் லியபேர்மான் கூறியிருந்தார். இதற்கிடையில், அரபு லீக்கும் காசாவுக்கு வரும் செவ்வாய்க் கிழமையன்று தூதுக்குழுவொன்றை அனுப்பவுள்ளது.