ரிம650,000 பெறுமதியுள்ள பிகேஆர் பிரச்சார பேருந்து வாங்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுவதை மறுத்த சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அது தம் சொந்த பணத்தில் வாங்கப்பட்டது என்றார்.
இதை இன்று மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவித்த காலிட், மாதத் தவணையில் அதற்கான பணத்தைக் கட்டி வருவதாகக் கூறினார்.
“அது (பேருந்து) நானே வாங்கியது. வேண்டுமானால் எம்ஏசிசி விசாரிக்கலாம். அதற்கான ஆவணங்களை எல்லாம் அவர்களிடம் கொடுத்து விட்டேன்”, என்றார்.
அப்போது மாநில மாற்றரசுக் கட்சித் தலைவர் சதிம் டிமான் எழுந்து அந்தப் பேருந்து காலிட்டின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று வினவினார்.
“அப்துல் காலிட் பின் இப்ராகிம் என்ற பெயரில் அது பதிவாகியுள்ளது. சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) தான் அதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது ”,என்று மந்திரி புசார் பதிலளித்தார்.
பிகேஆர் நாடு முழுக்க தேர்தல் பரப்புரை செய்வதற்கு உதவும் பிரச்சாரப் பேருந்தான ஜெலாஜா மெர்டேகாவை ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது.
அக்டோபர் மாதம் அரசாங்கத்தை ஆதரிக்கும் பல என்ஜிஓ-க்கள், பேருந்து வாங்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக ககாசான் எண்டி-பென்யிலேவேங்கான் சிலாங்கூர் ( Gagasan Anti-Penyelewengan Selangor-கேப்ஸ்) தலைமையில், எம்ஏசிசி-இல் புகார் செய்தன.
அப்பேருந்து சிலாங்கூருக்கு compactor லாரிகளை வழங்கும் குத்தகையைப் பெற்றுள்ள ஒரு தொழிற்சாலையிடமிருந்து வாங்கப்பட்டது என்று கெப்ஸ் கூறியது.
காலிட் ஒரு கடன்காரர் என்றும் பேங்க் இஸ்லாமுக்கு செலுத்த வேண்டிய கடனைச் கட்டத் தவறிவிட்டார் என்றும் கேப்ஸ் தலைவர் ஹமிட்சுன் கைருடின் கூறினார்.