நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்குமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள்

இந்த நாட்டில் சட்ட ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு நீதித் துறைக்கும் அரசாங்கத்தின் மற்ற இரண்டு கரங்களுக்கும் இடையில் அதிகாரப் பிரிப்பு தெளிவாக இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி அரிபின் ஸாக்காரியா கூறுகிறார்.

சட்டமியற்றும் அமைப்பும் நிர்வாகமும் மற்ற இரு அரசாங்கப் பிரிவுகளாகும்.

மலேசியா பின்பற்றும் முறை பிரிட்டனின் வெஸ்ட்மினிஸ்டர் பாணியில் அமைந்துள்ளது. அந்த முறையில் நிர்வாகத்துக்கும் சட்டமியற்றும் அமைப்புக்கும் இடையில் தெளிவான அதிகாரப் பிரிப்பு கிடையாது என அவர் கூறிக் கொண்டார்.

“ஆனால் அரசாங்கத்தின் இன்னொரு கரமான நீதித் துறை சம்பந்தப்பட்ட வரையில் அதே நிலை நிலவுவதாகச் சொல்ல முடியாது.

இந்த நாட்டில் சட்ட ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு நீதித் துறைக்கும் அரசாங்கத்தின் மற்ற இரண்டு கரங்களுக்கும் இடையில் அதிகாரப் பிரிப்பு தெளிவாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்,” என்றார் அவர்.

நீதித் துறை நியமன ஆணையச் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ளவாறு பிரதமர் நீதித் துறையின் சுதந்திரத்தைப் பிரதமர் நிலை நிறுத்துவது அவசியம் என நீதிபதி அரிபின் பிரதமருக்கு நினைவுபடுத்தினார்.

“2009ம் ஆண்டுக்கான நீதித் துறை நியமன ஆணையச் சட்டத்தின் இரண்டாவது பிரிவு நீதித் துறையின் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. தொடர்ச்சியான நீதித் துறை சுதந்திரத்தை பிரதமர் நிலை நிறுத்த வேண்டும் என அது கூறுகிறது.”

“அத்துடன் அந்தச் சுதந்தரத்தைப் பிரதமர் பாதுகாக்கவும் வேண்டும். நீதிபதிகள் தங்கள் கடமைகளை செய்வதற்கு உதவியாக தேவையான வசதிகளையும் நீதித் துறைக்கு கொடுக்க வேண்டும். நீதித் துறை மற்றும் நீதி தொடர்பான நிர்வாகத்தில் பொது மக்களுடைய நலன்கள் முறையாக பிரதிநிதிக்கப்படுவதையும் அவர் உறுதி செய்ய வேண்டும்,”என்றும் நீதிபதி அரிபின் கூறினார்.

“சட்ட ஆட்சி, நீதி பரிபாலன முறை” என்னும் தலைப்பில் 2012 நேர்மை விரிவுரை நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

TAGS: